பரவை மீது படர்கலம் - கடல் கடந்து செல்லும் கப்பல்; நாவாய். கலம் - மரக்கலம். கலம்கொண்டு - கப்பலில் வாணிபம் செய்தற்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு. நிரந்த பல்...வணிக மாக்கள் - தனதத்தன் சுற்றத்தாரும் நிதிபதியின் சுற்றத்தாரும், கப்பல் வாணிகத் துறைபோய்க் கைவந்த பிற கிளைஞரும். வடுவில் சீர் என்றது குலமுறை வாணிப வழக்கின் தருமத்தினையும் குலநலங்களாகிய பிற இல்லற மரபொழுக்கங்களையும் வழாமற் காக்கும் சிறப்பு. 1757 - 1758 பாட்டுக்கள் பார்க்க. மரக்கலம் சமைப்பித்தார்கள் - மேற்கூறியபடி மிகப் பழங்காலத்தே தமிழர்கடல் கடந்து சென்று தம் நாட்டுப் பண்டங்களை, அவை பெறும் வாய்ப்பில்லாத பிற நாடுகளில் விற்றுப் பொருளீட்டும் கடல்வாணிபத் தொழிலால் நாடுசெழிக்கச் செய்தனர் என்பது மட்டுமே யன்றிக், கப்பல் சமைக்கும் தொழிலும் (Shlpbuilding) கைவந்தவர்களாயினர்என்பது பழஞ் சரிதங்களிற் கண்ட உண்மை. நம் நாட்டுப் பண்டங்களைக் கடல் கடந்து அயல்நாடுகளிற் கொண்டுபோய்ச் செய்யும் வாணிபம் அறவே யொழிந்தது! கப்பல் செய்யுந் தொழிலும் அதனோடொழிந்தது! அது மட்டுமன்றி அயல்நாட்டுப் பண்டங்களைப் பெற்றாலன்றி உயிர்வாழ இயலாது என்ற நிலையிலும் இந்நாடு இறங்கி வந்து விட்டது! கால வேறுபாட்டின் வலிமைதான் என்னே? தமிழர்கள் இச்சரித விளக்கத்தை ஊன்றிக் கருதுவார்களாக. 32 1749. | கலஞ்சமைத் ததற்கு வேண்டுங் கம்மிய ருடனே செல்லும் புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப வேற்றிச் சலந்தரு கடவுட் போற்றித் தலையா நாய்கன் றானு நலந்தரு நாளிலேறி நளிர்திரைக் கடன்மேற் போனான். |
33 (இ-ள்.) கலம் சமைத்து - மரக்கலம் சமைப்பித்து முடித்து; அதற்கு வேண்டுங் கம்மியருடனே - கப்பல் செலுத்தற்குரிய மீகாமன் முதலிய தொழில் செய்வார்களுடனே; செல்லும்....ஏற்றி - சென்று வாணிபம் செய்யும் கடல் கடந்தநாடுகளில் விரும்பும் பண்டங்களுட் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு; சலம்தரு கடவுட் போற்றி - கடற்றெய்வத்தினை வழிபட்டு; தலைமையாம் நாய்கன் தானும் - அவ்வாணிபத் தலைவனாகிய வணிகனும்; நலம் தரும் நாளில் ஏறி - நன்னாளில் பயணம் கொண்டு கப்பலில் ஏறி; நாளிர்திரைக் கடல்மேற் போனான் - குளிர்ந்த அலைகளையுடைய கடலின்மீது பயணமாகச் சென்றான். (வி-ரை.) இப்பாட்டில் அந்நாளில் தமிழ் வணிகர் கடல் கடந்து கப்பலிற் சென்று வாணிபம் செய்யும் முறை நான்கு அறிவிக்கப்பட்டமை காண்க. ஆசிரியர்சேக்கிழார்பெருமான் வாழ்ந்த நாளிலும் தமிழ் மக்கள் கடல் தாண்டிச் சென்று வாணிபத்திலும் பிற வழிகளிலும் சிறந்திருந்தனர்என்பது நாட்டுச் சரிதங்களால் அறியப்படும். அவ்வுயர் நிலையினை இந்நாளில் தமிழ் மகன் நிற்கும் தாழ்ந்த நிலையுடன் ஒப்பு நோக்கின் எவரும் வருந்தாமலிருக்க இயலாது. கலம் சமைத்து - முன்பாட்டில் "மரக்கலஞ் சமைப்பித்தார்கள்" (1748) என்றது கப்பலின் வேண்டுமாறு அமைத்து முடித்ததனை; இங்குக் கலம் சமைத்து என்றது அதனை முற்றுவித்து நீரில் விடத்தொடங்கும் சடங்கினை. அதற்கு வேண்டும் கம்மியர் - கப்பல் செலுத்துவோர் - (மீகாமன்). தொழில் செய்வோர் - செப்பனிடுவோர் - முதலிய ஏவலர். கப்பல் வாணிபமும், கப்பல் அமைக்கும் தொழிலும் இந்நாளில் மறந்தொழிந்தபோது கப்பல் செலுத்தும் |