தொழிலும் அதனோடு மறைந்துபட்டு, இனிப் பிறர்பாற் கற்குந் தொழிலாயிற்று என்பது தாமே போதரும் என்க. செல்லும் புலங்கள் - கடல் கடந்து வாணிபம் செய்யச் செல்லும் அயல் நாடுகள். விரும்பு பண்டம் - அந்நாட்டவர்விரும்பி ஏற்கும் பண்டங்கள். பண்டம் என்றதனால் பஞ்சு - உணவுப் பொருள் முதலிய விளைபொருள்களல்ல என்பதும், தொழில்செய்து முற்றியவை என்பதும் பெறப்படும். பொருந்துவ - காலத்துக்கும் இடத்துக்கும் பொருத்தமாவனவற்றை. நிரம்ப - வாணிப முறையில் விற்றுப் பெரும்பொருள் ஈட்டுதலுக்கேற்ற அளவும், மரக்கலம் ஏற்றிச் செல்லும் ஆற்றலுக்கமையும் அளவும் முற்ற. ஏற்றி - கம்மியருடனே - பண்டங்களை ஏற்றி என்க. கலந்தரு கடவுள் போற்றி - கடற்றெய்வம் போற்றிக் கடலிற் செல்லத் தொடங்குதல் முறை. சலந்தரு கடவுள் - வருணன். "ஆழி கடலரையா" (நம்பி. தேவா. நொடித்தான் மலை - 10); "வருணனுஞ் செய்தனன் முன்பு மாதவம்" (1895). தலைமையாம் நாய்கன் - அவ்வாணிபத்தின் தலைவன். நாய்கன் - வணிகன். தானும் நலந்தரு நாளில் ஏறி - நன்னாட்கொண்டு பயணமெழுதல் முந்தையோர்கண்ட முறை; "நன்னாட்கொண்டு பெரும்பயண மெழுக வென்று நலஞ்சாற்ற" (கழறிற. புரா - 46). கம்மியர்களையும் பண்டங்களையும் ஏற்றுதற்கு நல்ல நாள் காண வேண்டுவதில்லை. அவை பயணத்துக்கு முன் பல நாளும் நிகழ்வன. தலைவன் ஏறிப் பயணம் தொடங்குதற்கு மட்டும் நன்னாட் குறித்தல் மரபாதலின் போற்றி - நாய்கன் - நாளில் ஏறி என்றார். இங்கு அவன் உட்கொண்டு குறித்த நலமாவது அம்மையாரை முற்றும் நீங்கிவிடும் காரியம். போனான் - மாங்கனி கண்ட அன்று முதலே தொடர்பின்றி ஒழுகினானாதலின் அம்மையார்பால் அறிவித்திலன்; பிரிபவன் நாயகியிடம் சொல்லிப் பிரிதல் மரபன்று என்பது மேலால் உள்ள காரணம். சென்றவன் இங்கு மீண்டுவந்து சார்தலிலன் என்ற குறிப்புப்படப் போனான் என்று கூறினார். 33 1750. | கடன்மிசை வங்க மோட்டிக், கருதிய தேயந் தன்னில் அடைவுறச் சென்று சேர்ந்தங் களவில்பல் வளங்கண் முற்றி, யிடைசில நாட்க ணீங்க மீண்டுமக் கலத்தி லேறிப், படர்புனற் கன்னி நாட்டோர்பட்டின மருங்கு சார்ந்தான். |
34 (இ-ள்.) கடன்மிசை வங்கம் ஒட்டி - கடலின் மீது கப்பலை ஓட்டி; கருதிய.....சேர்ந்து - தான் எண்ணிய தேசத்தில் சேரும்படி செலுத்திப் போய்ச் சேர்ந்து; அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி - அவ்விடத்தில் அளவில்லாத பலவளங்களையும் நிறைவித்துக்கொண்டு; இடை........ஏறி - இவ்வாறு இடையில் சில நாட்கள் செல்ல மீண்டும் அந்தக் கப்பலில் ஏறிக்கொண்டு; படர்புனல்.....சார்ந்தான் - புனல்படரும் பாண்டி நாட்டில் ஒரு கடற்கரைப் பட்டினத்தின் பக்கத்திற் சார்ந்தான். (வி-ரை.) (நாய்கன்) - ஓட்டி - சேர்ந்து - முற்றி - ஏறி - சேர்ந்தான் என்க. நாய்கன் என்ற எழுவாய் முன்பாட்டினின்றும் வருவிக்க. வங்கம் - கப்பல்; ஓட்டி - செலுத்தி; கப்பல் ஓட்டுதல் என்பது மரபு வழக்கு. கருதிய தேயம் - வாணிபஞ் செய்தற்காகக் குறித்து வைத்த தேசம். கடலின் அக்கரையில் உள்ளது. வங்காளம் அல்லது பர்மா முதலிய நாடுகளும், கடற்றீவுகளும் என்பது கருதப்படும். அந்நாடுகளிலும் தீவுகளிலும் பண்டைச் சோழர் |