ஒருவழி பெருக உய்த்தலாவது பல வகைகளாகிய பொன் - மணி - வெள்ளி முதலிய பொருள்களை எல்லாம் சேர்த்து விளைநிலம் - மனை - ஏனை வாணிபத்துறை - வட்டிக்குக் கடன் கொடுத்தல் - என்றிவை முதலிய ஊதியம் வரும் நிலைகளில் ஒரு முகமாக அமைவுபடுத்துதல். மெய்ப்புகழ் என்றது கடல் துறைமுகமாக உலக நிலையின் அந்நகர் பெற்ற புகழினை. ஊர் விரும்ப - ஊரார் வணிகனைத் தனித்து வாழாது மணம் செய்து இல்லறத்தின் வாழ்க என்று கூறி விரும்ப என்றும், அவ்வூராரால் விரும்பப்படும் பொருட்டு என்றும் உரைக்க நின்றது. அவன் முன்பே கலியாணமானவன் என்ற செய்தியை அறிவிக்காது மறைத்து ஒழுகினான் ஆதலின் ஊரவர் அவனைக் கலியாணம் செய்யப்பெறாதவன் என்று எண்ண இடமிருந்தது. மேல்வரும் பாட்டும் காண்க. செப்பரும் கன்னி - உடல் அளவில் அம்மையாரது நாயகனையே தனக்கும் நாயகனாகப் பெறும்பேறு கருதிச் செப்பரும் என்றார். "பெறலருந் திருவினாள்" என்று மேலுங் கூறுதல் காண்க. திருமலி வதுவை - உலகநிலைச் செல்வங்கள் பெருகுதற் கேதுவாகிய மணம். திரு - செல்வம். மலி - மலிந்த காரணத்தால் என்ற குறிப்புமாம். தன்னிலெய்தி - விரும்புமோர் - என்பனவும் பாடங்கள். 35 1752. | பெறலருந் திருவி னாளைப் பெருமணம் புணர்ந்து முன்னை யறலிய னறுமென் கூந்த லணங்கனார் திறத்தி லற்றம் புறமொரு வெளியு றாமற் போதிந்தசிந் தனையி னோடு முறைமையின் வழாமை வைகி முகமலர்ந் தொழுகு நாளில், |
36 1753. | முருகலர் சோலை மூதூ ரதன்முதல் வணிக ரோடும் இருநிதிக் கிழவ னென்ன வெய்திய திருவின் மிக்குப் பொருகடற் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பாற் பெருகொளி விளக்குப் போலோர் பெண்கொடி யரிதிற் பெற்றான். |
37 1752. (இ-ள்.) பெறலரும்...புணர்ந்து - பெறுதற்கரிய திருவினைப்பெற்ற அப்பெண்ணைப் பெருவிழாவினோடு கலியாணம் செய்து; முன்னை...வைகி - முன்னர் மணம் புரிந்த கருமணலின் ஒழுங்குபோன்ற வாசனை பொருந்திய மெல்லிய கூந்தலையுடைய தெய்வம் போன்ற புனிதவதியம்மையார்பால் தான் செய்த வஞ்சனையைப் புறத்தில் ஒரு சிறிதும் வெளிப்படாதபடி மறைத்துவைத்த மனத்துடனே ஏனை எல்லாவற்றிலும் முறைமையில் வழுவாது வாழ்ந்து; முகமலர்ந்து ஒழுகும் நாளில் - முகமலர்ச்சியுடன் ஒழுகி வரும் நாளில், 36 1753. (இ-ள்.) வெளிப்படை. வாசம் வீசுகின்ற சோலைகளையுடைய பழமையாகிய அவ்வூரில் முதன்மை தங்கிய பெரு வணிகர்களுடன் கூடிக், குபேரன்போலப் பொருந்திய செல்வத்தால் மிகுந்த அலைகள் பொரும் கடலில் கப்பல்களைச் செலுத்தி வாணிபம் செய்யும் புகழ்படைத்த அவ்வணிகன் தன் மனைவியிடமாக ஒளி பெருகும் விளக்குப்போல ஒரு பெண் மகவை அருமையாகப் பெற்றனன். 37 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1752. (வி-ரை.) பெறல் அரும் திருவினாள் - முன் "செப்பரும்" கன்னி - (1751) என்ற கருத்தை விரித்தபடி. பெறல் அருந் திரு என்றது புனிதவதியாரது கணவனையே தனக்கும் நாயகனாகப் பெறும் அரிய செல்வம். |