பக்கம் எண் :


866திருத்தொண்டர் புராணம்

 

இட்டான். அவரது "புனிதவதியார்" என்ற பெயரைத் தன்னால் விரும்பப்பட்ட மகவுக்குச் சூட்டினான்.

(வி-ரை.) மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணி - பெண் மகவுக்கு மணம் ஒன்றே சடங்காக விதித்திருப்பவும் செல்வ நிலையின் அருமைப்பாட்டினால் பெயர் சூட்டுதல் முதலிய பலவும் தனது பெண் மகவுக்குச் செய்ய எண்ணி என்க. பெற்றும் - பெண் மகவாகப் பெற்றும் எனச் சிறப்பும்மை விரித்துரைக்க.

தான்...மனைவியாரை - புனிதவதியம்மையாரை. தொடர்பு அற நினைந்து - "வாழ்வற வாழ்வித்த மருந்தே" (திருவாசகம்) என்றபடி தன்னை அவர் பற்றித் தொடராதிருக்கும் வண்ணம் நினைந்து அதன் பொருட்டு என்க.

தெய்வத்தொழுகுலம்...இட்டான் - தொழும் குலதெய்வம் என்க. கடன் அமைத்து நாமம் இட்டான் "உமது பெயர் இக்குழந்தைக்கு இட்டுச் சடங்கு செய்கின்றேன். இனி மனைவி என்ற உமது தொடர்பு இன்றி இருத்தல் வேண்டும்" என்று வேண்டிக்கொண்டு பேரிடுதல். பாம்புகள் முதலியவற்றின் அதிதெய்வங்களுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு ‘நீவிர் இனி வந்து எமது கண்ணிற் காணக்காட்டுதல் கூடாது' என்று வழிபடும் நாட்டுச் சிறுதெய்வ வழிபாட்டு முறையினைப் பற்றிக்கொண்டு வணிகன் இவ்வாறு வேண்டினன் என்பது. உடன் உறைவு அஞ்சி நீத்த - நீத்தற்குக் காரணம் அவர் உடன் உறைதற்குத் தகுதியின்று என்ற அச்சமே என்பது. கடன் அமைத்தல் - வேண்டுகை செய்து வழிபடுதல்.

மகவை - நாமம் - இட்டான்- என்க. மகவுக்குப் பேர் இட்டான்.

38

1755.

இந்நிலை யிவனிங் கெய்தி யிருந்தன; னிப்பா னீடுங்
கன்னிமா மதில்சூழ் மாடக் காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு மனையறம் புரிந்து வைக;

39

1756.

விளைவளம் பெருக்க வங்க மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர் மாநகர் தன்னின் மள்னி
அளவின்மா நிதிய மாக்கி யமர்ந்தினி திருந்தா"னென்று
கிளரொளி மணிக்கொம் பன்னார் கிளைஞர்தாங் கேட்டா ரன்றே.

40

1755. (இ-ள்.) இந்நிலை...இருந்தனன் - இந்த நிலையை இவ்வணிகன் இங்குப் பொருந்தி யிருந்தனன்; இப்பால் - இப்பக்கம்; நீடும்...தாமும் - நீண்ட கெடுதவில்லாத பெரிய மதில் சூழ்ந்த மாடங்களையுடைய காரைக்காலின் வணிகனாகிய தனக்கு ஒப்பு இல்லாத செல்வமுடைய தனதத்தன் மகளாராகிய புனிதவதியம்மையாரும்; மன்னிய...வைக - நிலைபெற்றுப் பொருந்திய கற்பினுடன் இல்லறம் புரிந்து தங்க,

39

1756. (இ-ள்.) கிளர்ஒளி...கிளைஞர் - பெருகும் ஒளியுடைய மணிகளையுடையதொரு கொம்புபோன்ற புனிதவதியம்மையாரின் சுற்றத்தார்கள்; "விளைவளம்...இருந்தான்" என்றே - வாணிபத்தால் விளைக்கப்படும் வளங்களைப் பெருக்குதற் பொருட்டுக் கப்பலின் மேல் ஏறிச்செல்லும் பரமதத்தன், வளரும் புகழினையுடைய பாண்டி நாட்டில் ஒரு பெருநகரினிடத்துத் தங்கி, அளவில்லாத பெருஞ்செல்வங்களை ஆக்கி, அங்கு நிலையாக விரும்பி இனிதிருந்தான்" என்று; தாம் கேட்டார் - தாங்கள் கேள்விப்பட்டனர்.

40

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.