பக்கம் எண் :


868திருத்தொண்டர் புராணம்

 

(இ-ள்.) வெளிப்படை. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடனே அம்மையாருடைய சுற்றத்தார்களும் தம்முடைய நெருங்கிய கிளைஞர்களை விடுத்து, அவ்வணிகனது நிலையினைத் தாமும் கேட்டறிந்துகொண்டு, துன்பங்கொண்ட மனமுடையவர்களாகி, "மற்று அவன் இருந்த இடத்தில் பருத்த வெம்முலையினாராகிய புனிதவதியம்மையாரைக் கொண்டுபோய் விடுவது கடன்" என்று சொன்னார்கள்.

(வி-ரை.) தம் உறு கிளைஞர்ப் போக்கி...கேட்டு "கேட்டாரன்றே" (1756) என முன்பாட்டிற் கூறியிருப்பவும், மீண்டும் கேட்க வேண்டியதென்னை? எனின், முன்னர்க் கேட்டது நம்பத் தகுந்த உறவினரிடத்தன்றி அயலாரிடமிருந்து கேட்ட செய்தி யாதலானும், அச்செய்தி இல்வாழ்க்கை நிலையினைப்பற்றிய அந்தரங்கமான செய்தியாதலானும், முன் கேட்டதனை உறவினரால் மீண்டும் உறுதிப் படவறிந்து உண்மை கண்டாலன்றி மேற் செய்தக்கதனை நிலையிட முடியாமை பற்றி என்க. "ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ, ரொற்றினா லொற்றிக் கொளல்" (குறள்) என்ற உண்மை இச்செய்தியிலும் ஏற்றபடி பொருந்தக்கொள்வது உலகநிலை மரபென்க. சுற்றத்தாரும் தாமும் கேட்டு என்ற உம்மைகள் இக்கருத்தும் புலப்பட நின்றன.

கேட்டபோதே - போக்கி - கேட்ட செய்தி மிகக் கவலை விளைவிப்பதொன்றாதலின் கேட்டவுடனே உற்ற கிளைஞரைப் போக்கினர் என்ற விரைவு குறித்தது.

உறு கிளைஞர் - உற்ற செய்தியைத் தம்மைப் போலவே கவலைகொண்டு உண்மைப்பட அறிவார். "ஒட்டி உலர்வா ருறவு" என்ற நீதிநூற் கருத்துங் காண்க.

அவன் நிலை - அவ்வணிகனது வரலாறு முழுமையும்.

மம்மர் - துன்பம்; துயரம். மயக்கம் என்பாருமுண்டு.

மற்று அவன் - மற்று - அவ்வாறு மனம்மாறி வேறுபட் டொழுகுகின்றவன் என்பது குறித்தது.

அவன்...விடுவது - விடுவது செய்தக்க கடன்; கருமம் என்பதாம். கடன் என்பது இசையெச்சம். அவன் இருந்த பாங்கர்க் கொண்டுபோய் விடுவது என்பது, அவன் இங்கு மனைவியாருடன் இருத்தல் நியதியும் முன்னை நிலையிற்கொண்ட ஒழுக்கமுமாம்; ஆயின், அது செய்யாது, அவன், வேறிடத்திற் றங்கிவிட்டால் அது கொண்டு பிணக்கம் செய்யாமற் கணவன் இருக்குமிடத்தில் மனைவியுமிருக்கச் செய்தலே குலமுறையும் ஒழுங்குமாம் என்று துணிந்தனர் அச்சுற்றத்தார். இது அந்நாள் மக்களது மனநேர்மையினையும் ஒழுக்கத்தினையும் எடுத்துக்காட்டி உலகரை வழிப்படுத்துவதாம். இங்கு வஞ்சனையாக நீங்கித் தன் கடமையைவிட்டு ஒழுகும் குற்றம் வணிகன் மேலது. அதுகொண்டு பிணக்குதலும் வழக்கிடுதலும் அக்குற்றத்துக்கு நீதிநூல் வகுத்தபடி அரசதண்டஞ் செய்வித்தலும் உரியதே யாகும்; அவ்வாறு நடப்பர் ஏனைச் சாதாரண மக்கள்; அதிலும் தனதத்தன் போன்ற செல்வமிக்கவர் அவ்வாறே செய்தல் இயல்பு; என்பன இந்நாளிலும் நாம் கண்கூடாகக் காண்பனவாம். ஆயினும், இங்கு அம்மையாரின் சுற்றத்தார் ஒழுகிய நன்முறை அவர்களது மேம்பாட்டினைக் காட்டுவதன்றி உயர்ந்த குறிக்கோளையும் காட்டுவதாம். கொண்டுபோய் விடுவது - தரமாகச் செல்வது என்றதும் அவ்வுயர்நிலையைக் கொண்டனர்.

என்றார் - என்று துணிந்துகொண்டனர்.

கொம்மை வெம் முலையினார் என்றது அம்மையாரின் இளம்பருவ நோக்கி அவர் அதுபோழ்து கணவனுடன் கூடிய இல்வாழ்க்கையில் அமரத்தக்க பருவத்தினர் என்பதும், அவர் கணவனை நீக்கித் தனித்து இருத்தல் தகாது என்பதும் சுற்றத்தார் கருதியவை என்று குறித்தது. இது நற்சுற்றத்தின் இயல்பு, "காதல்செய் சுற்றத்தார்" (1758) என்பது காண்க.