1758. | மாமணிச் சிவிகை தன்னின் மடநடை மயிலன் னாரைத் தாமரைத் தவிசின் வைகுந் தனித்திரு வென்ன வேற்றிக், காமரு கழனி வீழ்த்துக், காதல்செய் சுற்றத் தாருந் தேமொழி யவருஞ் சூழச் சேணிடைக் கழிந்து சென்றார். |
42 (இ-ள்.) வெளிப்படை. பெரிய அழகிய சிவிகையில் மடப்பமுடைய நடை பொருந்திய மயில்போன்ற புனிதவதியம்மையாரைத் தாமரை யாதனத்தில் வீற்றிருக்கும் தனித்திருவினார்போன்று ஏற்றிக்கொண்டு, அழகிய திரையைச் சூழ்வித்துக், காதல் செய்யும் சுற்றத்தார்களும் இனிய மொழியினையுடைய தோழியர் முதலிய பெண்களும் சூழ்ந்து செல்ல; நெடுந்தூரம் பல நாட்கள் கடந்து சென்றனர். (வி-ரை.) சிவிகை - ஏற்றி - சிவிகையில் ஏற்றிச் செல்வது இவ்வாறு பல திறத்தாலும் நாயகனிடத்துக் கொண்டு சேர்க்கும் பெண்களைக் கொண்டு செலுத்தும் அந்நாள் வழக்குக்களுள் ஒன்று போலும். தனதத்தன் மகளாருக்குரிய செல்வ நிலையின் தகுதிபற்றி இவ்வாறு சென்றனர் என்றலுமொன்று. கழனி வீழ்த்து - மறைந்து செல்லுதல் வணிகர்களுள் மரபுவழக் கல்லாமையும் உணரப்படும். மடநடை மயில் அன்னாரை - "மென்னகை மயிலை" (1727) என்றபடி மணஞ்செய்த அற்றை நாட்போலவே இன்றும் விளங்கியவர் என்பது குறிப்பு. தாமரைத் தவிசின் வைகும் தனித்திரு - திரு - முத்தித்திருவின் தெய்வமாகிய ஞானமுதல்வி. தனித்திரு - என்ற கருத்துமது. தாமரை - முன்னர்த் "திருமடந்தை" (1718) என்றவிடத்து விளக்கப்பட்டது காண்க. பலகாலும் பிறந்திறந்துழல் பவர்களாய் வெண்டாமரை செந்தாமரைகளில் வாழும் ஏனைத் திருமாதர்களை இங்குக் கொண்டுரைத்தல் பொருந்தாமை தனி என்பதனாற் பெறப்படும். கழனி - திரை. சிவிகையின் வாய்தலையும் திரையால் மறைத்தனர். காதல் செய் - என்றதனாற் சுற்றத்தார்களின் இச்செய்கைகளுக்குக் காரணங் கூறியபடி. காதல் செய் - செய் என்பது கொண்ட என்ற பொருளில் வந்தது. காதல் செய்தலால் சூழ்ந்து சென்றார் என்பார் உடம்பொடு புணர்த்தி ஓதினார். தேமொழியவர் என்றது இங்குத் தோழியர் முதலியோர்களைக் குறித்தது. சுற்றத்தார் என்பது ஆண்மக்களையும், தேமொழியவர் என்பது பெண்களையும் குறித்த தென்பாருமுண்டு. சுற்றத்தார் - இருபாலாரையும் உணர்த்தும் என்க. சேண் - காலத்தாலும் இடத்தாலும் நெடுமை. இடைக் கழிதல் - இடையிடுதல். கப்பல் ஏறிச் சென்ற வணிகன் அந்நெடுந்தூரம் உள்ள அயல் நாட்டில் வாழ்ந்தானாதலின், பன்னூறு நாழிகை வழி கடந்து நடந்து செல்வோராகிப் பல நாட் பயணம் செய்தனர் என்பது. அந்நாளில் வேறு பயண வசதியில்லாமையும் உணரப்படும். நடந்து செல்வோர் இடையிடையே தங்கிச் செல்லும் அவசியமுண்டு. செல்லுதல் - இப்பாட்டினாலும், சேர்தல் - வரும் பாட்டினாலும் கூறும் கவிநயமும் காண்க. கவிகை வீழ்த்து - என்பதும் பாடம். 42 1759. | சிலபகல் கடந்து சென்று, செந்தமிழ்த் திருநா டெய்தி, மலர்புகப் பரம தத்தன் மாநகர் மருங்கு வந்து, குலமுதல் மனைவி யாரைக் கொண்டுவந் தனைந்த தன்மை தொலைவில்சீர்க் கணவனுக்குச் சொல்லிமுன் செல்ல விட்டார். |
43 |