என்று சொல்லி அந்த ஆழ்ந்த கயத்தில் அமிழ்த்துவது போல நிகழ்த்த என்க. நூக்கியிட - நூக்கியிடுதல் போலச் செய்ய. நூக்குதல் - அமிழ்த்தல். நீத்தாய - நீந்தி மிதந்தாலன்றிக் கால்நிலங் கொள்ளலாத ஆழமுடைய. நிலைக்கொள்ளும் - நின்று கொள்ளும். வழித்துறை நீரிற் செல்லும் நல்ல வழியும் நல்ல துறையும். ஒன்று - ஒன்றும். தேவரீர் நன்னெறிகளை அறிவிக்கவும் அறியாது பிற துறையில் வீழ்ந்தேனாதலின் காப்பதனை விட்டு இவ்வாறு சூலையினால் வருத்துகின்றீர்; பிழை செய்யினும் காப்பது பெரியயோர்களின் கடனாயிருக்க இவ்வாறு செய்தல் கேட்டறியாத சொல் என்றபடி. சமயங்கள் பலவும் உயிர்கள் தத்தம் பக்குவபேதப்படி செல்லும் ஒவ்வொரு துறையாவன. அத்துறைகள் தாம், நிலையான - இடிந்து பாழ்பட்டன - வழுக்குவன - முதலை முதலிய கொடிய பிராணிகள் உள்ளன - கீழ்கள் பயில்வன - முதலாகப் பல திறப்பட்டு உயிர்களை வீழ்த்துவனவாம்; ஆதலின் இக்குற்ற மொன்றுமில்லாத வேதநெறியின் மிகுசைவத் துறையே வழித்துறையாவன என்றபடியாம் - (6) உலகத்தார் தலை - வீந்தவர் தலை. இங்குப் பிரமன்றலையையும் குறித்தது. அலந்தேன் - வருந்தினேன். தமிழ் - தமிழ்ப் பாட்டு. உடல் - குடர் குறித்தது - (7) உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண்பொருளும் - மனை வாழ்க்கையாலும் அதற்கு உரியவளமாகிய பொருள்களாலும் பெரிதும் தருக்கினேன். ஒண்பொருள் - ஈண்டு ஒண்மை என்றது இல்லறத்துக்கும் ஈகையாதி பசு புண்ணியங்களுக்கும் உதவின தன்மை. தலைகாவல் - மேலிருந்து காக்கும் ஒருவர். இலாமையினால் உயர்ந்தேன் என்று கூட்டுக. வய்ந்தே - இப்போது அதனை நீக்கி உம்வயப்பட்டு. பறித்து - பற்றி இழுத்து. புரட்டி - புரளச் செய்து, அறுத்து - கிழிப்பது போலக் குடைந்து. ஈர்த்திட - இழுத்துக்கொள்ள - (8) மனம் வஞ்சம் ஒன்றும் இலாமையினால் அடியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்த வலிதேன் என்க. வஞ்சம் என்பது சூழ்ச்சி. இங்கு நன்மை தீமை நாடித் தீமையை அறிந்து பிறரறியா வண்ணம் அனுபவிக்கும் நல்ல சூழ்ச்சி குறித்தது. வலித்தல் - உயர்வாக எண்ணித் தருக்குதல். (உம்மைத் தவிர வேறு) யாதொருவரும் துணையில்லை என்க. இது சமணர் எல்லாருங் கைவிட்டதனாலும், துணையென்று அடைந்த அம்மையார் காட்டுவித்ததனாலும் உணர்ந்தது. கலித்து - இரைத்து. மலக்கிட்டு - முறுக்கி உழக்கி. "மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி யென்னுங்களிறும்" (காந்தாரம் - அதிகை - 5). கவர்ந்துதன்ன - (என் உயிரைக்) கொள்ளை கொண்டு உண்ணுதலாலே. அலுத்தேன் - இளைத்தேன். உயர்ந்தேன் மனைவாழ்க்கை, வலித்தேன் மனைவாழ்க்கை - என்பனவற்றால் நாயனார் இவ்வுலக நிலையில் மனை - பொருள் முதலியவற்றால் மிகச் சிறந்திருந்தனர் என்பதறியப்படும்.1 1. | இவை போன்ற வாக்குக்கள் கொண்டு நாயனாருக்கு மனைவி மக்கள் உண்டு என்ற ஆராய்ச்சியிற் புகுவோருமுளர். 1300-1301-1302 பாட்டுக்களிற் கண்ட காலம் நாயனார் மனைக்கண் நின்று அறங்கள் செய்து பின் துறவு பூண்டிருந்த காலம். அப்போது மணஞ்செய்து இல்லற நடத்தியிருப்பினும் இருக்கலாம்; மணஞ்செய்யாமல் இருத்தலும் கூடும். அதனால் இச்சரிதத்துக்கு ஆவதொன்றில்லை. சடசம்பந்தமான அவ்விசாரணை ஈண்டுப் புராண சரிதத்துக்கு வேண்டப்படுவதன்று என்ற கருத்துப்பற்றி ஆசிரியர் அதனைக் கூறாராயினர். நாயனார் துறவறத்திருந்தனர் என்பதுவே நாம் ஈண்டுக் கைக்கொள்ளத் தகுவது. ஞானநிலையிற் சமயாசாரியரை அடையும்போது அவரது ஞானச் சரியை முதலியவற்றைத் தேடிக் கண்டு நலம் பெறுதலைவிட்டு, நமது பாசவிகாரமாகிய அவிசாரங்களையே கொண்டு அங்கும் செல்லுதல் செய்யத் தகாத காரியம் என்பது |
|