(இ-ள்.) வெளிப்படை. சில நாட்கள் கடந்து போய்ச், செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டிற் சேர்ந்து, மலர் புகழினையுடைய பரமதத்தனிருந்த பட்டினத்தின் பக்கம் வந்து, குலமுதல் மனைவியாரைக் கொண்டுவந்து தாம் அணைந்துள்ள செய்திகளையெல்லாந் தொலைவில்லாத சீர்க் கணவனறியும்படி முன்னே சொல்லியனுப்பினர். (வி-ரை.) சில பகல்...எய்தி - காரைக்காலுக்கும் பாண்டி நாட்டெல்லைக்கும் உள்ள தூரம் சிலநாட்களில் நடந்து சென்று சேரத்தக்க அளவு எள்ளது என்பதாம். செந்தமிழ்த் திருநாடு - பாண்டிநாடு. 1554 பார்க்க. மலர் புகழ் - புகழ் - இம்மையில் வருவது. அது செல்வம் முதலிய பல காரணங்களாலும் வரும். "புகழும் பழியும் பெருக்கிற் பெருகும்" (திருக்கோவை - 181) என்றபடி அது பரவுந் தன்மையுடையது. பரமதத்தனது நிலையினையும் நகரையும் அவனது செல்வம்பற்றிய புகழினால் இவர்கள் அறிந்து வந்தடைந்தார்கள் ஆதலின் மலர் புகழ் என்றார். தொலைவில் சீர் - இது மலர் புகழ் என்றதனில் வேறு. மனைவியாரைச் சார்வுபடுத்தக்கொண்டுவந்த தன்மை கணவனுக்குச் சொல்லிவிடும் நிலைபற்றிச் சுற்றத்தார் எண்ணியபடியால், அவர்களுடைய எண்ணத்திறங்கள் புனிதவதியாரின் அரும்பெறற் கணவன் என்று நின்ற தன்மைபற்றித் தொலைவில் சீர் என்றார். அச்சிறப்பு எவ்வாற்றானும் கணவன் வேண்டாது பிரிந்திருப்பினும் தொலைக்கினும் தொலைக்க முடியாதொன்றாம் என்ற குறிப்புச் சுற்றத்தார்கள் எண்ணியது. கணவனார்க்கு என்பது பாடமாயின் அது இக்கருத்துப் பற்றியதென்க. இனிக் கணவனும் அம்மையாரைத் தெய்வம் என்று கொண்டு ஒழுகியமையாலும், மேலும் அவரது பெயரைத் தன் மகவுக்கு இட்டு வழிபட்ட நிலையாலும், இனியும் அவரை வணங்கி உலகர்க்கு அவர் பெருமையைக் காட்டவுள்ள நிலையாலும் தொலைவில் சீராயிற்று என்க. செல்லவிட்டார் - முன் அறிவிப்பின் பொருட்டுத் தூதாகச் சிலரைச் செலுத்தினர். 1760. | வந்தவ ரணைந்த மாற்றங் கேட்டலும் வணிகன் றானுஞ், சிந்தையி லச்ச மேய்திச், செழுமணம் பின்பு செய்த பைந்தொடி தனையுங் கொண்டு பயந்தபெண் மகவி னோடு "முந்துறச் செல்வே" னென்று மொய்குழ லவர்பால் வந்தான். |
44 (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு வந்தவர்கள் தனது நகரை அணைந்த மாற்றத்தினைக் கேட்டதும், வணிகனும் மனத்தில் அச்சங்கொண்டு செழுமையுடைய கலியாணத்தைப் பின்னாட் செய்துகொண்ட மனைவியையும் பெற்றெடுத்த பெண் மகவினுடன் கொண்டு, "அவர்கள் இங்கு என்னிடம் வரும்முன்பு நான் செல்வேன்" என்று கருதி அம்மையாரிடம் வந்தான். (வி-ரை.) மாற்றம் - செய்தி. தூது வந்தவர் சொல்லிய சொல். தான் எண்ணி யிருந்ததற்கு மாறாக வந்த செய்தி என்ற குறிப்புப்பட மாற்றம் என்றார். அச்சம் எய்தி - மாங்கனியை அதிசயித்துக் கையில் வாங்கியவுடன் அது மறையக்கண்ட அப்போது "தணிவரும் பயமேற் கொள்ள வுள்ளமும் தடுமாறெய்தி...நீங்கும் துணிவுகொண்"டதனையே (1747) மனத்துட் பொதிந்து வைத்து, அவ்வாற்றினையே இதுவரையும் தொடர்ந்து ஒழுகி இந்நிலையில் நின்றானாதலின் உள்ளிருந்த அந்த அச்சம் மீண்டும் தலைப்பட்டு மேற்செயல்களை ஊக்குவதாயிற்று. எனவே செய்தி கேட்டவுடனே வணிகன் மனத்துள் முதலில் எழுந்த மன நிகழ்ச்சி அச்சமே என்பது. |