பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்871

 

செழுமணம் பின்பு செய்த - முன்பு செய்ததும் செழுமணமாதலின் பின்பு செழுமணம் என்னாது செழுமணம் பின்பு என்றார். செய்த - செய்துகொண்ட.

பைந்தொடி தனையும் கொண்டு - கொண்டு - உடன் அழைத்துக்கொண்டு. அச்செய்தியின் வரலாற்றை அவளும் அறியாதபடி வணிகன் ஒழுகினானாதலின், அவன் அழைப்ப ஏவல்வழி உடன் வந்தனளேயன்றி அறிந்து வந்தனளல்லள் என்பார் (ஒரு பண்டம் போலக்) கொண்டு என்றார்.

பயந்த பெண் மகவினொடும் - பயந்த - பெற்ற. பயத்தின் காரணமாக நீங்கி வந்த மணஞ்செய்து, அச்சத்தின் வழியே பெற்று, அவ்வழியே பெயருமிடப் பெற்ற என்ற குறிப்புப்படப் பயந்த என்றார்.

"முந்துறச் செல்வேன்" - இது வணிகன் உட்கொண்ட மனத்துணிவு. முந்துற - மனைவியார் தன்மனையினிடத்து வரும் முன்பு மனைவியார் தனது மனைத்தொடர்புபற்றி வருதலைப் பெருந் தீங்கு பயக்கும் செயலாகக் கருதித் "தொடர்வற நினைந்து...கடனமைத்து" (1754) ஒழுகி வந்தானாதலின் அவர்தன் மனைக்கு வருதலாகிய தீங்கு நிகழாமற் காக்கும்பொருட்டு அது வருமுன்பு - செல்வேன் என் றுட்கொண்டான்.

மொய் குழலவர் - "பூங்குழலார்" (1730) என்பது முதலாக முன்னுரைத்த வற்றுக்கேற்பக் கூறினார்.

44

1761.

 தானுமம் மனைவி யோடுந் தளர்நடை மகவி னோடு
 மானிளம் பிணைபோ னின்ற மனைவியா ரடியிற் றாழ்ந்தே
"யானும தருளால் வாழ்வேன்; இவ்விளங் குழவி தானும்
 பான்மையா லுமது நாமம்" என்றுமுன் பணிந்துவீழ்ந்தான்.

45

(இ-ள்.) வெளிப்படை. வணிகன் தானும் அந்த மனைவியோடும் தளர்நடைப் பருவத்தில் உள்ள பெண் மகவினோடும் மானின் இளம் பிணைபோல் நின்றமனைவியாருடைய அடிகளில் வணங்கி ‘நான் உமது அருளினால் வாழ்வேன்; இந்த இளங்குழவிக்கும் அப்பான்மைபற்றி உமது திருநாமத்தையே சூட்டி யிருக்கின்றேன்" என்று சொல்லி அவர் முன்பு பணிந்து நிலமுற வீழ்ந்தனன்.

(வி-ரை.) அம்மனைவி - உடன் கொண்டு சென்ற அந்த. முன்னறி சுட்டு.

மானிளம் பிணைபோல் - இளமையுடைய பெண் மான் என்றது இளம் பருவமும், மாறிய நிலைகண்டு மருண்ட நோக்கமும் குறித்தது. நின்ற - கணவன் வருதல் கண்டு எழுந்து நின்ற என்ற பொருளும் தர நின்றது.

அடியில் தாழ்ந்தே - என்றது நின்றபடி செய்த முதல் வணக்கம். வந்து கண்டவுடன் இவ்வாறு தலை வணங்கித் தனது நிலையினையும் தனது கருத்தினையும் விண்ணப்பித்துப், பின் நிலமுற வீழ்ந்து செய்த வணக்கம் பணிந்து வீழ்ந்தான் என்றதனால் அறிவிக்கப்பட்டது. அடியில் தாழ்ந்தே - "முந்துறச் செல்வேன்" என்று வந்தானாதலின், தான் வந்தவுடன் பன்னாட் பிரிந்துவந்த மனைவியார் தன்னை முறையில் வீழ்ந்து வணங்குவார் என்று எண்ணி, அவர் அவ்வாறு வணங்குமுன் தான் அவரது அடியில் தலைவணங்கித் தாழ்ந்து, பின்னரே சொல்லத் தொடங்குகின்றான். தெய்வமாகக் கொண்டானாதலின் அதற்கேற்ப முன்னர்த் தாழ்ந்தான் என்பதும் முறையாகும்.

"யான் உமது...நாமம்" - சுற்றத்தாரெல்லாம் முன் நிற்க, இது வணிகன் புனிதவதியம்மையாரை நோக்கிக் கூறியது. அருளால் என்றும், குழவி - உமது நாமம் என்றும் கூறியவதனாலும், முன்னர்த் தலை வணங்கியும் பின்னர் வீழ்ந்து வணங்கியும் செயல் செய்தவாற்றாலும் தான் அவரைத் தெய்வமாகக் கொண்டு