மருண்ட நோக்கம் பற்றியும் அவ்வத் திறத்துக்கேற்றபடி உவமித்த நயமுங் காண்க. "அடுகளிறு" (584) என்றவிடத்துரைத்தவை பார்க்க. அச்சமோடு - அச்சம் உலக நிலை பற்றிய இல்லறத்தின் உடலின் தொடர்பு பற்றி வந்தது. "அஞ்சுவ தியாதொன்று மில்லை யஞ்ச வருவது மில்லை" என்றது அடியவர் நிலையாதலின், உயிர்த் தொடர்புபற்றி இறைவனது சார்புகொண்ட நிலை வந்தபோது இவ்வச்சம் முதலிய யாவும் அறவே ஒழிந்துவிட்டமை மேல் 1765 - 1770 பாட்டுக்களிற் காண்க. உணர்வு உறு கிளைஞர் - உணர்வு - ஈண்டுக் குலப்பெருமைபற்றிய உணர்ச்சி குறித்தது. அதுபற்றி வணிகனது தகாத ஒழுக்கம் கண்டும் இவர்கள் அம்மையாரை உடன்கொண்டு சேர்த்தனர். இங்கும் அவனது தகுதியற்ற செயலைக் கண்டு வெள்கி வினாவினர். திருமனைவி - கற்பு நிலையின் மேம்பட்டவராதலின் உனது ஏவல் வழி நிற்பவர் என்றது குறிப்பு. திரு - ஈண்டுக் கற்பு நிலையின் மேன்மை குறித்தது. மணமலி தாரினாய் - மணமலி தார் - தார் - வணிகர்க்குரிய அடையாள மாலை - மாலை - கீர்த்தியும் மேம்பாடும் கொற்றமும் குறிக்கும் தசாங்கங்களுள் ஒன்று. அப்பெற்றியினால் மாலையினையும் எடுத்துப் போற்றுதல் மரபு. "மந்தார மாலையே பாடுதுங்கா ணம்மானாய்" (திருவா.) முதலியவை காண்க. தாரினாய் என்றது அங்ஙனம் கொற்றங் குறிக்கும் அங்கம் பழுது குறிக்கும்படி செய்துவிட்டனை என்ற குறிப்பு. மணமலி - என்றது புகழ் பரவிய; என்ற பொருட் குறிப்புப்பட நின்றது. மனைவி தன்னை - நீ வணங்குவதென்னை - உன்னை மனைவி வணங்குதல் நெறியாயிருப்ப, நீ வணங்குவதென் என்பது குறிப்பு. அச்சத்தோடு - மணமரு - என்பனவும் பாடங்கள். 46 1763. | மற்றவர் தம்மை நோக்கி, "மானுட மிவர்தா மல்லர்; நற்பெருந் தெய்வ மாத னானறிந் தகன்ற பின்பு பெற்றவிம் மகவு தன்னைப் பேரிட்டே; னாத லாலே பொற்பதம் பணிந்தே; னீரும் போற்றுதல் செய்மின்" என்றான். |
47 (இ-ள்.) வெளிப்படை. (வணிகன்) மற்றும் அவ்வாறு வினவிய சுற்றத்தாரைப் பார்த்து, "இவர் தாம் மானுடப் பிறவியல்லர்; நற்பெருந் தெய்வமேயாவர்; அவ்வாறு தெய்வமாதலை நான் அறிந்து அவரை நீங்கி வந்த பின்பு பெற்ற இம்மகவுக்கு அவர் பெயரை இட்டேன்; ஆதலாலே அவருடைய பொற்பாதங்களை வணங்கினேன்; அதுபோலவே நீவிரும் போற்றுங்கள்" என்று சொன்னான். (வி-ரை.) வணிகன் - என்ற எழுவாய் மறைந்து நின்றது. வணிகனும் இதனோடு இவ்வரலாற்றினின்று மறைந்துபடுகின்றான் என்ற குறிப்பும் காண்க. மேல்வரும் பாட்டில் வரும் வணிகன் என்றது அவனது மாறிய நிலை குறித்தது. மானுடம் - மனிதப் பிறப்பு. சுற்றத்தாரை நோக்கி "நீங்கள் எண்ணுகின்றது போல இவர் வெளியில் காணுகிறபடி மனிதப் பிறவியில் வந்தவர் என்றும், எனது மனைவியாரென்றும், அதனால் நான் அவரை வணங்குவது தகாதென்றும் உள்ளநிலை பொருந்தா தென்பான் "இவர்தாம் மானுடம் அல்லர்" என்று சுருங்கக் கூறினான். அச்சம்பற்றிச் சொல்லாற்றல் சுருங்கியதென்க. மேலும் இவ்வாறே காண்க. நல் பெரும் தெய்வம் - மானுடமல்லாராயின் பின் என்னை? எனின், தெய்வப் பிறப்பு ஆவர்; அதுவும், மக்களை அச்சுறுத்தித் தீமைசெய்துழலும் சிறுதெய்வங்கள் போலன்றி, நன்மைசெய்யும் பெருந்தெய்வமாவர்; அதனை நான் அறிந்தேன் என்பதாம். |