இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1764. (வி-ரை.) வணிகன் மாற்றங் கேட்ட பின்பு சுற்றத்தார் அம்மையார் என்ற இருதிறத்தாரும் நின்ற நிலையினை இவ்விரண்டு பாட்டானும் கூறுகின்றார். அவன் சொல்லுமுன்பு அவனது ஒழுக்கங் கண்டவுடன் இவ்விருதிறத்தவர் நிலையினை முன் (1762) உரைத்தாங்கே இதனையும் கூறிய நயம் காண்க. வணிகனது தொடர்பு முன் பாட்டோடு ஒழியச், சுற்றத் தொடர்பு இதனோடு சுருங்கி யொழிந்தது. அம்மையாரது சிவனருட்டொடர்பும் "உறவரவா ருருத்திரபல் கணத்தினோர்கள்" (தேவா) "உற்றாரை யான் வேண்டேன்" "வேண்டேன் சுற்றம்" (திருவா) என்றபடி உருத்திர பல்கணத்தின் தொடர்பும் இனிப் பெருகி என்றும் நிகழத் தொடங்குகின்றமை குறிக்க. இங்குச், சுற்றத்தார் நிகழ்ச்சியைச் சுருக்கியும் அம்மையாரது அருட்டொடர்ச்சி நிலையினைப் பெருக்கியும் கூறிய நயமும் காண்க. என்று நின்றார் - (1764); என்று பரவி நின்றார் - என்று இருதிறத்தின் நிகழ்ச்சியும் குறித்த நயமும் காண்க. இது என் கொல் என்று - இன்னதென்று தெளிய வாராது கொண்ட மயக்கநிலை சுற்றத்தார் கொண்டது. இதனை "ஈங்கிவன்......பாங்குற வேண்டும்" என்ற மேல்வரும் பாட்டிற் கூறும் வண்ணம் அம்மையார் அடைந்த தெளிந்த சிவநெறி நிலையுடன் ஒப்பிட்டு உண்மை கண்டுகொள்க. மன்றல் அம் குழலினார் - "பூப்பயின் மென்குழல் மடவார்" (1737) என்றவிடத்துரைத்தவை பார்க்க. வணிகன் வாய் மாற்றம் - மாற்றம் - 1760-ல் உரைத்த குறிப்பு. அம்மையார் அணைந்த செய்தி வணிகனுக்கு மாற்றம் விளைத்தாங்கே, வணிகன் சொன்ன செய்தி அம்மையாருக்கு மாற்றம் விளைத்தது என்பார் ஈரிடத்தும் ஒரு சொல்லாற்கூறிய நயமும் காண்க. கேளா - கேட்டு. கொன்றைவார்.....போற்றி - வணிகன் உற்ற சுற்றமாகி நிற்க, இதுவரை இறைவரைக் காணும் உயிர்ச் சுற்றமாகக் கொண்டொழுகிய அம்மையார், இப்போது உடற்சுற்றம் உயிர்ச்சுற்றம் என்ற இருநிலையினும் கண்டுகொண்டு வேண்டுகின்றார். சிந்தை ஒன்றிய நோக்கின் மிக்க உணர்வு - "ஒன்றியிருந்து நினைமின்கள்" என்றபடி வேறெங்கும் செல்லவிடாது, சிந்தையினை இறைவர்பாலே ஊன்ற வைத்து உள்ளே அழுந்திய வுணர்வு. "விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி, விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி, விளக்கில் விளக்கை விளக்கவல்லார்க்கு, விளக்குடையான் கழல் மேவலு மாமே" (திருமந் - 9 - 168) என்று ஞானோதயம் என்ற பகுதியில் திருமூலதேவர் அருளியபடி, பாச ஞானம், பாச ஞானம் இரண்டினையும் அறவே களைந்து பதி ஞானமொன்றிலே ஒன்றி உள்ளே ஊன்றிப் பார்க்கின்ற நிலை. உரை செய்கின்றார் - உரை செய்கின்றாராகி; முற்றெச்சம். உரைசெய்கின்றார் - என்று - பரவி - என மேல்வரும் பாட்டின் வினை எச்சத்துடன் கூட்டுக. 48 1765. (வி-ரை.) ஈங்கு - இந்நிலை - இப்பக்கம் என்ற பொருளில் வந்தது. இவன் - இவனுக்காக - கணவன் என்ற தொடர்பு அற்று விட்டதாகவே, சிவனையும் அவனடியார்களையும் அன்றி வேறொன்றனையும் பொருளாக எண்ணி மதியாத உயர்நிலையில் நின்றபடியால், பொருளல்லாத வேறு சாதாரண உயிர் வருக்கத்துள் ஒருவனாகவே அம்மையார் வணிகனை வைத்து ஒருமையிற் கூறும் உண்மை நிலை கண்டுகொள்க. ஆசிரியர் அந்நிலை பற்றியே இச்சரித முழுமையும் வணிகனை ஒருமையில் வைத்துக் கூறிய அமைதியும் காண்க. இது - 1763-ல் வெளிப்படக் கூறியதும், 1761-ல் செயலாற் காட்டியதும், பிரிந்து உறைந்ததும் ஆகிய இவற்றின் தொகுதியாகிய கருத்து. |