இனி - மேல்வரும் வாழ்வின் பகுதி. தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி - தாங்கிய - பொதி - என்றமையால் அம்மையார் இவ்வுடற் பகுதியை ஒரு பொருட்பற்றாத சுமையாகக்கொண்டே தாங்கி வந்தார் என்பது. வனப்பு நின்ற தசை - உடலின் வனப்பு என்ற தசையினைப்பற்றியே நிற்பதொன்று. தசையின் பற்று வற்றியபோது உடலை வறிதாகிய ஆபாச எலும்புக்கூடாகவே உலகம் கருதுவது காண்க. இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி - மகளிர், தமது உடல் வனப்பும், அதுபற்றிச் சித்தரித்தும் கத்தரித்தும் செய்துகொள்ளும் பல்வகை ஆடை அணி முதலிய கோலங்களும் தம் நாயகனின் அனுபவத்திற்கென்றே மேற்கொள்வர் என்ற நம் முந்தையோர் கொண்ட உயர்ந்த முறையினை அம்மையாரது அருட்டிருவாக்கின் உண்மையாற் கண்டுணரலாம். தசையும், அது பற்றுக்கோடாக நின்ற வனப்பும் அம்மையார் இதுகாறும் கணவன் பொருட்டே தாங்கி நின்றார் என்பதாம். தளர்நடைப் பருவத்தே பணியணிவார் கழற்கடிமை பழகிவரும் பாங்கின் மொழி பயின்றும், வண்டல் பயில்வன எல்லாம் சிவபெருமான் றிருவார்த்தை பயின்றும், தொண்டர்வரிற் றொழுதும் அவ்வியல்பின் வந்தாராதலின் அம்மையார் இங்குத் தமது உடல் வனப்பினை இதுவரையும் தாங்கிய நிலை பற்றிக் கூறுவதியல்பே யென்க. இங்குக் (கழித்து) - ஆங்கு - என்பன மாயை உருவாகிய இவ்வுலக நிலையும், மாயை கடந்து சிவமே பற்றிய அவ்வுலக நிலையும் குறித்தன. இங்கு என்ற மாத்திரைச் சுருக்கமும் ஆங்கு என்ற நெருக்கமும் கருதத்தக்கன. நின் தாள் போற்றும் பேய் வடிவு - வனப்பு நின்ற தசைப்பொதியின் வடிவு உலகத்தைப் போற்றி நின்றது. கணவனுடனிருந்தபோது "மனையறத்தின் பண்பு வழாமைப் பயின்று", (1730) கடப்பாட்டிலூட்டுவார் (1738) என்றது முதல், "ஆங்கவன்கைக் கொடுத்தலுமே, (1746) என்பது வரை கூறிய அம்மையாரது நிகழ்ச்சிகளும், அவனைப் பிரிந்துறைந்தபோதும் "மன்னிய கற்பினோடு மனையறம் புரிந்து வைகியதும்" (1755), பின்னர் அவனிலை அகட்டு அவனிடம் சார அணுகியதும் ஆகிய இவ்வளவும் உலகத்தைப் போற்றிய நிலையாம். இங்கு அம்மையார் வேண்டியது, இனி, அவ்வாறன்றிச் சிவன் தாள்களையே போற்றும் சிவகண உருவாகிய பேய் வடிவு வேண்டுமென்பதாம். நின்றார்கள் போற்றும் - என்பது பாடமாயின் சிவகணத்துள் சார்ந்து நிலை பெற்றவர்கள் உம்மைப் போற்ற மேற்கொண்ட என்றுரைத்துக் கொள்க. பேய்வடிவு - வாயுவவுடம்புடன் கூடித் திரிந்து மக்களை அலைத்து வரும் பேய் வடிவமன்று. அவை, ஐம்பூதச் சேர்க்கையாலாகிய உடற்கூட்டில் ஏனைப்பகுதிகள் மறைய, வாயு ஒன்றுமே மிகுத்துக் கண்ணுக்குத் தோன்றா வகை திரியும் பாசவுடம்புகள். இங்கு அம்மையார் வேண்டிப் பெற்றது, மானிட உடம்பினுள் ஏனையவை ஒழித்து எலும்புக்கூடு ஒன்றுமே காணப்பெற்றதும், காற்றுப்போற் கடிது செல்லும் தன்மை வாய்ந்ததும், மண் என்ற ஒரு பூதச்செயல் மிகுந்த எலும்பு வடிவாயினும், களிம்பு நீங்கிப் பொன்னான செம்புபோலப் பாசநீக்கித் தூய்மையாக்கப்பட்ட சுத்தமாயாவுருவம் வாய்ந்ததும், ஆனால் மக்கள் கண்ணுக்குப் புலப்படுவதுமாகிய ஓர் ஒளிபெற்ற திருவுடம்பு என்க. அதனைக் கண்டு சுற்றத்தாரும் தொழுதஞ்சினர் (1767); ஏனை உலகவருள்ளும் கண்டவர் வியப்ப புற்றஞ்சிக் கையகன்றோடி அவ்வேடத்தன்மை உள்ளவர் கூறினார்கள்; (1770) அவ்வுருவுடன் அம்மையார் வடதிசைத் தேயமெல்லாம் மனத்தினுங்கடிது சென்றருளினர்; திருக்கயிலைமலையின் மேல் ஏறும்போதும், திருவாலங்காடனையும்போதும் காலினால் நடை தவிர்த்துத் தலையினால் நடந்து சென்றருளினர்; அதனை இறைவர் "பெருமைசேர் வடிவு" என்று உமையம்மையாருக்கு எடுத் |