பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்889

 

இதன் அன்பின்றிறம்தான் என்னே? என்று அதிசயம்கொண்டு வினாவியருளியது. இறைவர் திருவாக்கின் மூலம் உலகமறிந்து அம்மையாரின் பெருமையைப் போற்றி யுய்யச் செய்யும் காரணம்பற்றி உமையம்மையார் வினாவியருளிய தென்க. இறைவர் அருள, ஆகமத் திறனெலாந் தெரியக் கேட்டு இறைவரைத் தாம் பூசைசெய்து உலகுய்ய வைத்துத் திருக்காமக்கோட்டத்திற்றவம் புரியும் உமையம்மையாரது கருணை போலவே இதனையுங் கண்டு கொள்க; (1126 - 1128). இக்கருத்தை "அம்மையே! என்னும் செம்மை ஒருமொழி யுலகமெல்லா முய்யவே அருளிச் செய்தார்" என்று மேல்வரும் பாட்டில் ஆசிரியர் விளக்கியருளுதல் காண்க.

நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான் - இமயவல்லியார் வினாவியதும் அதற்கு இறைவர் அருள் செய்ததும் உயிர்களாகிய நம்பொருட்டேயாமென்பார் "நம்பெருமாட்டிக்கு" என்றார். "உள்ளவாறு கேட்டருளினாள் உலகையாளுடையாள்" (1127) என்ற கருத்து. நாயகன் - நடத்துபவன் என்பது பொருள். உலகை நடத்தும் தலைவராதலின் அருளிச் செய்வார் என்பது குறிப்பு. அங்கு - அப்போது. அவ்விடத்து என்றலுமாம். அருளிச் செய்வானாகி - "உலகமெல்லாம் உய்யவே அருளிச் செய்தார்"; (1774) என்று முடித்ததும் கருதுக.

57

1774. (வி-ரை.) பேணும் அம்மை - பேணுதல் ஊட்டிக் காத்தல் என்றும், அன்பு மிகுதியாற் பாராட்டிப் போற்றுதல் என்றும் இரு பொருளும்பட உரைக்க நின்றது.

பேணும் அம்மை - ஊட்டும் தாய் என்றது "தாயுமிலி தந்தையிலி தான்றனியன்" (திருவாசகம்) என்றும், "அன்னையிலா வுனக்கிவளோ ரன்னையாய் வந்தாளோ" (திருவினை - புரா) என்றும் கூறியாங்கு, அம்மையில்லாத இறைவர்க்கு இவர் அம்மை போலப் பாராட்டிக் காத்தனர்; அம்மையின் அன்புபோன்ற அன்பு பூண்டனர் என்பது. இவ்வாறு பேணியமை "தொண்டர்வரிற் றொழுது" (1721), "நம்பரடி யாரணைந்தானல்லதிரு வமுதளித்தும்......வேண்டுவ கொடுத்தும்" (1731); "நாதன்ற னடியாரைப் பசிதீர்ப்பேன்" (1734) என்றும் போந்த தன்மைகளாலறிக. என்னை? "நடுமாடுங் கோயி னம்பர்க்கொன் றீயிற், படமாடுங்கோயிற் பரமர்க்க தாமே" (திருமந்) என்றபடி அவை யாவும் இறைவரைப் பேணியபடியேயாம் என்க. அடியவர்க்குள்ளே நின்று இறைவர் உண்டனர் என்பது. அம்மையார் இறைவரிடத்துத் தாயினது அன்பின் றம்மையே கொண்டனர் என்பது திருவந்தாதி, திரு இரட்டைமணி மாலைத் திருவாக்குக்கள் பலவற்றின் அகச்சான்றானும் அறியப்படும்.

பேணித் துதித்துப் பாராட்டுந் திறனும் அவ்வாறே அறியப்படும். அவற்றுட் சில ஈண்டுத் தரப்படுகின்றன : "உரைக்கப் படுவது மொன்றுண்டு கேட்கிற் செவ்வான்றொடைமே, லிரைக்கின்ற பாம்பை யென்றுந் தொடேல்" (திரு இரட் - 7); "அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல், பரவித் தொழுதிரந்தேன் பன்னாண் - முரணழிய, வொன்னாதார் மூவெயிலு மோரம்பா லெய்தோனே, பொன்னார் மற்றொன்று பூண்" (திருவந் - 27); "இவரை யிகழ்வதே கண்டீர் - இவர் தமது, பூக்கோல, மேனிப் பொடிபூசி யென்பணிந்த, பேய்க்கோலங்கண்ட பிறர்" (மேற்படி 29); "திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்" (மேற்படி 43); "குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத், தெழிலாக வைத்தேக வேண்டா கழலார்ப்பப் பேரிரவிலீமப் பெருங்காட்டிற் பேயோடு மாரழல்வாய் நீயாடு மங்கு" (51);...... "விண்ணோர் பணிந்து, பசும்பொன் மணிகுடந் தேய்ப்ப முசிந்தெங்கு; மெந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவா, மந்தர மரைபோலடி" (76); முதலியவை கருதுக.