அம்மை காண் - காண் - கண்டுகொள்க என உறுதிப்பொருள் தந்து நின்றது. இவ்வாறு உமை யம்மையாருக்கு அருளியதன்றியும், உடனே அங்குவந் தணைந்த அம்மையாரை அத்தன்மை பற்றியே "அம்மையே!" என்று அப்பனார் தமது திருவாக்கினால் அழைத்தருளியதும் காண்க, அதனோடமையாது, ஆசிரியர் தாமும் மேல் அங்கணன்"அம்மையே" என் றருள்செய (1775) என்று தமது திருவாக்காலும் அழைத்துக் காட்டிய கவி நயமும் கண்டுகொள்க. முன்பு "தலையினால் நடந்து" என்ற சிறப்பினை மும்முறை கூறி அதன் பெருமையை விளக்கினபடியே, ஈண்டு "அம்மை" என்ற சிறப்பினை இப்பாட்டினும் வரும் பாட்டினும் மும்முறை கூறித் தேற்றிய திறமும் காண்க. மேலும், "வேணியினார் அம்மை என மதுர மொழி கொடுத்தருளப் பெற்றார்" (1781) என்று அதன் சிறப்பினை எடுத்து முடித்துக் காட்டியும், "கீதமுன் பாடும் அம்மை கிளரொளி மலர்த்தாள் போற்றி" (1792) என்றும் புராண நிறைவாக்கியதும், இப்புராணத்துக்கு அம்மையார் புராணம் எனப் பெயரிட்டதும் காண்க. உமையே! - உமையம்மையார் வினாவியதன்கண், "எம்பெருமான்" என்ற விளி இடையில் வைத்ததற்கேற்ப ஐயன் அருளிய விடையினும் "உமையே!" என்று இடையில் வைத்துக் கூறிய நலம் சிந்திக்க. அம்மையாரது பெருமையின் நடுவுள் சிவமும் சத்தியுமாக இருவோரும் நிலைக்குறிப்பு. "பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே" (திருமந்.) "அடியே னடுவு ளிருவீரு மிருப்பதானால்" (திருவா.) மற்று இப்பெருமை சேர்வடிவு - "எற்பின் யாக்கை" (1773) என்று உமையம்மையார் கூறியதனை நோக்கி, இவ்வடிவு ஏனை எற்பின் யாக்கைகளுடன் வைத்து எண்ணத் தக்கதன்று; மிகப் பெருமை சேர்ந்த வடிவாகும் என்பார் மற்று என்றார். வினைமாற்றுப் பொருளில் வந்தது. பெருமை சேர் வடிவு என்றது பூதகணங்களின் வடிவு. பெருமையானது இதனைத் தேடி வந்து அடையும் நிலையில் உள்ள வடிவம் என்ற குறிப்புமாம். வேண்டிப் பெற்றனள் - 1765 பார்க்க. அருகு வந்த அணைய - மலையின்மேல் ஏறும்போது மேற்கண்டவாறு இமயவல்லி நோக்கியதும், வினவியதும், ஐயன் அருளியதும் நிகழ்ந்தன. இதனிடையில் அம்மையாரும் அருகு வந்தணைந்தனர்; அவ்வாறு அணைய என்பதாம். அணைந்தது இமயவல்லியார் கூறியவாறு ஏற்பின் யாக்கையோ? அன்றி, இறைவர் கூறியவாறு பெருமைசேர் வடிவமோ? இவற்றுள் இன்னது அணைந்தது என்னாது பொதுப்படக் கூறிய திறம் சிந்திக்க, பாண்டி நாட்டுப் பதியில் வணிகன் வாய் மாற்றங் கேட்கும் அவ்வளவுவரை "மன்றலங் குழலினார்" (1764) என்று குறித்தார். அதன்மேல் பேய் வடிவம் ஆனார் (1766) என்றபோது, அவ்வாறு ஆயினவர் இன்னார் என்னாது, எழுவாய் தொக வைத்தார். அதன்பின் அருளிச் செய்வார் - பாடி - (1768), எடுத்துப் பாடி - வழியால் வந்தார் (1769) - என்பார் (1770); சென்றார் (1771); ஏறும்போது என்ற வினைகளுக் கெல்லாம் எழுவாய் புலப்படாது வைத்துக் கூறினார். இமயவல்லிக்கு இறைவர் "அம்மை" என ஈண்டு அறிவித்த நிலை தொடங்கி மேல்வரும் இயம்புகின்றார் (1775), என்றார் (1776), போற்றி நண்ணும் (1779), பாடினார் (1780) என்ற வினைகளுக்கெல்லாம் "அம்மை" (1778) என்ற எழுவாய் ஒன்றே வைத்த அமைதியும் கண்டுகொள்க. "அம்மையே!" என்னும் செம்மை, ஒருமொழி - அம்மை என்பது செம்மை செய்யும் ஒரு மொழி என்பது. செம்மை - செம்பொருள். "சிவத்தன்மையை ஆக்கிக் கொடுக்கும் சிறந்த சாதனமாகிய மொழி என்க. |