வினைக் கழிவுக்காகப் பிறந்தே வரவேண்டுமாகலின் அவ்வாறு பிறக்க நேர்ந்தால் என்றபடி, வீடுபேறு வேண்டிய அருச்சுனனுக்கு அதுவும் கொடுத்து, அது பெறும் முன்னர்ப் பிறவியுங் கொடுத்த வரலாறு இங்குச் சிந்திக்கத்தக்கது. அநுபவிக்க வேண்டி எஞ்சி நிற்கும் கன்மப் பகுதியின் கணக்கு உயிர்களுக்கு அறியவாராமையின் பிறப்பு உண்டேல்? என்ற ஐயப் பாட்டில் வைத்தோதினார். பிறப்பு - எவ்வகைப்பட்ட பிறப்பும் உள்ளடக்கி வாளர பிறப்பென்றார். மக்களாய் வந்தோர் பின்னரும் வேறு வகை அடைதல் கூடும் என்பது அறிஞர் துணிபு. உன்னை என்றும் மறவாமை வேண்டும் - என்றும் - இடரினும் தளரினும், வாழினும் சாவினும் இவை முதலாக எந்நிலையினும் எனவும், எப்பிறப்பிலும் எனவும், எக்காலத்தும் எனவும் எல்லா வகையும் கொள்க. மறவாமை வேண்டும் - "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே, வழுவா திருக்க வரந்தர வேண்டும்" (திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்) என்ற அப்பர் பெருமான் திருவாக்கின் கருத்தே இங்கு அம்மையாரிடத்தும் ஒப்ப நிகழ்வதாயிற்று. மறவாநிலை இறைவர் தர வருவதொன்றாம் என்பது "மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக், காயங்காட்டி" (நம்பி - ஆரூர் - செந்துருத்தி - 7) என்றதனாலும் அறிக. மீண்டும் பிறப்பு உண்டேல் மறவாமை வேண்டும் - அப்பிறப்பு இன்னதாக வேண்டும்மென்று கேட்டாரலர், அது அவ்வவர் வினைக்கீடாகத் தரப்படுதலான். ஆனால் நினைப்பும் மறப்பும் எல்லாப் பிறவிகளிலும் நிகழும்; மறவாமை ஒன்றே ஏனைத் தவப் பயனாகிய நலங்களையெல்லாம் விளைவிக்கும் என்பது. இன்னும் வேண்டும்......அடியின் கீழ் இருக்க - இது முடிந்த முடிபாக அம்மையார் வேண்டியது. முன் வேண்டிய பிறவாமையும், பிறப்பின் மறவாமையும் என்ற இருநிலையும் கடந்து, வினைக் கழிவின்பின் முடிவில் பெறவுள்ளதனையும் ஈண்டே வேண்டிக் கொள்கின்றார். பிறவாமையே பெறினும், அன்றிப், பிறந்து மறவாமையே பெறினும் இறுதியில் பாடிக்கொண்டு திருவடியின்கீழ்த் தங்குதல் வேண்டும் என்பது. இதனையும் ஈண்டே வேண்டிக் கொள்ளும் அவசியமும் இயைபும் என்னை? எனின், தாம் வேண்டியவாறு பிறவாமையைப் பெறுவதும், அது பெறாது எப்பிறப்பாயினும் பெற்று மறவாமையைப் பெறுவதும் தம் வயத்தனவல்ல; அவை இறைவன்வயத்தனவாம். இவற்றுள் எதுவரினும் திருவடிக்கீழ் என்றும் நீங்காது பாடிக்கொண்டிருக்கப் பெறுவதனையே தாம் சிறந்த முடிபாகிய வரமாகக் கொண்டனர். அது கிடையாவிடின் மேலிரண்டு நிலையும் முற்றுப் பெற்றனவாகா என்பது கருத்து. "முத்திதனின் மூன்று முதலு மொழியக்கேள், சுத்தவநு போகத்தைத் துய்த்தலணு" (உண்மை விளக்கம் - 50) என்றும், "உயிர்தானுஞ் சிவாநுபவ மொன்றினுக்கு முரித்தே" என்றும் வரும் உண்மை நூல்களின் முடிபுகளின்படி இறைவரது திருவடிக்கீழ் நின்று ஆனந்தமுறுதலே ஆன்மா பெறத்தக்கது என்க. அறவா - அறம் இறைவனது உருவம். ஈண்டு அறம் என்றது எல்லா உயிர்கள் மேலும் வைத்த அருளும், அவ்வருளை அவ்வவற்றுக் கேற்றவாறு செலுத்தும் நியதியுமாம்."நீதிபலவும் தன்னதுரு வாமென" (பின் - தேவா); "அறவனை" (நம் - தேவா). "நான்......இருக்க" என்று வேண்டும் வரத்தினிடையே, "அறவா" என்று வைத்தது நீ என் நடுவுள் இருத்தல் வேண்டும் என்ற குறிப்பும்பட நின்றது. பாடுதல் - சங்காரத்திலும் ஐயன் திருநடத்தில் உடனிருந்து பாடும் பூதங்களின் செயல். அம்மையாரது பதிகங்கள் பார்க்க. மிக அருமையான அவ்வரங்களை வேண்டும் இத்திருப்பாட்டினை யாவரும் பயின்று ஓதி வருதல் நலம் தரும். 60 |