பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்895

 

1778.

அப்பரி சருளப் பெற்ற வம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொரு ளானார் தம்மை விடைகொண்டு, வணங்கிப்போந்து,
செப்பரும் பெருமை யன்பாற், றிகழ்திரு வாலங் காடா
நற்பதி தலையி னாலே நடந்துபுக் கடைந்தா ரன்றே.

62

(இ-ள்.) அப்பரிசு.....விடைகொண்டு - அவ்வாறு வரம் அருளப் பெற்றவராகிய அம்மையாரும் வேதங்களில் செம்பொருள் என்றும் சத்து என்றும் சொல்லப்படும் இறைவரிடம் விடைபெற்றுக்கொண்டு; வணங்கிப் போந்து - வணங்கிச் சென்று; செப்பரும் பெருமை அன்பால் - சொல்லுதற்கரிய பேரன்பினால்; திகழ்.....அடைந்தார் - விளங்குகின்ற திருவாலங்காடாம் நல்ல திருத்தலத்தைத் தலையினாலே நடந்துசேர்ந்து கோயிலுட்புகுந்து திருமுன்பு அடைந்தனர்; அன்றே - அப்பொழுதே.

(வி-ரை.) அப்பரிசு - பரிசு - தன்மை. மேற்கூறிய அவ்வாறு. அகரம் மேற்கூறிய என முன்னறி சுட்டு. அம்மையார் நான்காக வகைப்படுத்திக் கேட்டதனை ஒன்றாகப் பெறுந் தன்மை. "எப்போதும் ஆனந்தம் சேர்ந்து" என்றதனால் இறவாத இன்பமும் - மாநடங் கண்டு என்றதனால் இறவாத அன்பும், எப்போதும் (மாநடங் கண்டு) என்றதனால் பிறவாமையும், எப்போதும் பாடுவாய் என்றதனால் மறவாமையும், ஆலங்காட்டில் ஆடும் மாநடம் கண்டு என்றதனால் ஆடும் போது அடியின் கீழிருத்தலும் பெறவைத்த பரிசு கண்டுகொள்க. எப்போதும் என்றதனை முன்னும் பின்னும் தனித்தனி கூட்டிவைத்து உரைத்துக்கொள்க.

அப்பரிசு - பரிசு - வரம். அன்புக்குரிய சன்மானம் என்ற கொண்டுரைத்தலுமாம்.

செம்மை வேத மெய்ப்பொருள் ஆனார் - வேதச் செம்மைப் பொருளும் மெய்ப்பொருளும் ஆனார் என்று கூட்டுக. பொருள் என்றது செம்மை என்றதனோடும் சென்று இயைந்து செம்பொருள் என்ற பொருள்தர நின்றது. செம்பொருள் - சிவம். "வாய்மைச் செம்மைப் பொருளும் தருவார்" (974); மெய்ப்பொருள் - "அதுவே சத்தாயுள்ள சிவம்" (சிவஞானபோதம் - 6 சூத்.) என்று ஞான சாத்திரத்தினுள் பேசப்படுவது.

விடைகொண்டு - அம்மையார் "அப்பா" என்றவாறும், ஐயன் "நம்பால் வேண்டுவதென்?" என்றவாறும், அம்மை வரங் கேட்டவாறும், ஐயன் கொடுத்தவாறும், அதன்மேல் அம்மை விடைகொண்டவாறும் ஆகிய இவையெல்லாம் வாக்கு மனாதீத கோசரமாகிய சிவத்தினிடத்து எவ்வாறு நிகழ்ந்தன என்னின்? பசு ஞான பாச ஞானங்களைக் கடந்து பதி ஞானமாகிய சிவானுபவத்தினுள் நின்று சிவன் உணர்த்தக் கண்டதனால் இந்நிலைகள் கூடின என்க. சிவசங்கற்பம் உணர்த்தப் பெற்றதனால் இந்நிலை விளைந்ததாம் என்பதும் "அங்கணன் அம்மையேயென் றருள்செய" (1775) என்றதனால் காண்க. இதனானே இஃது உலகர்க்கு விளங்காமையும் அறியப்படும்.

செப்பரும் பெருமை அன்பால் என்றதனை "வணங்கிப் போந்து" என்பதனுடனும், "நடந்துபுக்கு அடைந்தார்" என்பதனுடனும் முன்னும் பின்னும் கூட்டுக. பெருமை அன்பு - பேரன்பு; சிவனிறைவுட்பெறும் அன்பாதலின் பவநிறைவுட்பட்ட எவரும் பேசலாகாத பெருமை என்க. சிவனிறைவுட் பட்டோரும் பேசலாகாப் பெருமை என்பதும் ஆளுடைய பிள்ளையார் இவ்வன்பின் பெருமையை உட்கொண்டு திருவாலங்காட்டினை மிதித்தற் கஞ்சிப் புறம்பே எழுந்தருளியிருந்த வரலாற்றினால் அறிதற்பாலது.