பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்897

 

வியப்படைந்து; "எட்டி இலவம்" என எடுத்து - "எட்டி இலவம்" என்று தொடங்கி; "கொட்ட முழவம் குழகன் ஆடும்" எனத் திருப்பதிகம் பாடினார் - "முழவம் கொட்டக் குழகன் ஆடும்" என்ற முடிபினையுடைய திருப்பாட்டுக்களால் திருப்பதிகத்தினைப் பாடியருளினார்.

64

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1779. (வி-ரை.) ஆலங்காடதனிற் - காண்பொழுது - என்று இயையும். இறைவன் ஆடும் கோலம் எங்கும் உள்ளதாகவும் அதனை வெளிப்படக் கண்டு பயன்பெறவுள்ள தலங்கள் சிலவே. அவற்றுட் சிறந்ததொன்று திருவாலங்காடு என்பதும், அங்குக் காணப்பெறுவது அண்டமுற நிமிர்ந்தாடும் கோலமாம் என்பதும் கூறப்பட்டன.

அண்டம் உற நிமிர்ந்து ஆடும் கோலம் - அண்டம் - மேலண்டம். நிமிர்த்து என்பது நிமிர்ந்து என நின்றது. மேலண்டத்துள்ளார் மாட்டுக் கருணையினால் அவர்களுக்கு அருள்செய்யத் தூக்கியது போல என்பது குறிப்பு. "விண்செலன் மரபினையர்க் கேந்திய தொருகை" (முருகு) என்பது காண்க. காளியுடன் செய்த கூத்தில் அவள் கூத்தினுக்கு மேற்பட்டிருக்கும் நிலையைக் காட்டித் தூக்கியதென்பது வரலாறு. "காளியோ டாடிக் கனகா சலத்தாடிக், கூளியோடாடிக் குவலயத்தே யாடி" (998) என்பது திருமந்திரம். (கனகரசலம் - பொற்பொதுவாகிய சிதம்பரம்; குவலயம் - மண். (ஆலங்காட்டினைத் தழுவுவது). குவலயத்தே கூளிகளோடு ஆடுதலின் பேய் வடிவம்பெற்ற அம்மையார்க்கருளும் இடமாக அருளினர் என்பதாம்.

ஆலங்காடதனிற் கோலம் காண்பொழுது - ஆலங்காடு காண்பொழுதும், கண்டபின் அதனுட் புகுந்து அங்கு ஆடும் கோலம் காண்பொழுதும் என்று தனித்தனி கூட்டுக. "ஆடும் எங்கள் அப்பனீடம் திருவாலங் காடே" (மூத்த திருப்பதிகம் 1) என்று பாட்டுத்தோறும் முடிப்பதனால் இடத்தையும், அதனுட் கோலத்தையும் கண்ட அப்பொழுது இரண்டினையும் சேர்த்துப் பாடியருளியதென்க. காண்பொழுது - கண்ட அப்பொழுது இதனால் இத்திருப்பதிகம் முதலிற் பாடியருளப்பட்டதென்பது விளங்கும்.

"கொங்கை திரங்கி" என்று எடுத்து - எடுத்தல் - தொடங்குதல். "கொங்கை திரங்கி...பெண் பேய்" என்ற அளவு அம்மையார் தமது பேய் வடிவத்தை விரித்துக் கூறுதல் காண்க.

மூலம் காண்பரியார் தம்மை காண்பொழுது - "வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே" என்றும், "இரண்டு வகையின்...உலகு" (சிவஞானபோதம் - 6 சூத்.) என்றும் கூறியபடி, பசுபாச ஞானங்களாற் காண்பரியாராகியும் சிவஞானத்தாற் காணவுள்ள வராதலின் அவ்வாறு கண்டனர் என்பது. இரட்டுற மொழிதலால் ஆடுகின்ற - காண்பரியார் என்று கூட்டி உரைக்கவும் நின்றது.

மூத்த பதிகம் - அம்மையாரது திருப்பதிகங்கள் இவ்வாறு வழங்கப்படுதல் மரபு. பதிகம் என்ற அமைப்பில் வரும் அருளிப்பாட்டுக்களுக் கெல்லாம் காலத்தால் மூத்தவை இவை என்ற காரணத்தாற் போந்த பெயர். கோயின் மூத்த பதிகம் என்ற திருவாசகப் பகுதி இதுபோலவே கோயிலில் முதலிற் பாடப்பெற்ற பதிகங்கள் இரண்டனுள் முதலிற் பாடப்பட்ட காரணத்தாற் பெயர் பெற்றதும் கருதுக.

நற் பதிகம் - நல் - "இடைப் பிற வரலுமா மேற்பன" என்பவாகலின், நன்மை இப்பதிகங்களின் பயனாய் ஏற்ப வரும் என்பது; "தொண்டை நன் னாடு" (1078) என்புழிப் போல.