பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்93

 

(வி-ரை.) மேவுற்ற இவ்வேலையில் - சூலை அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும், முதல்வன் கருணையின் மூழ்கித் துதித்துத் தொழுத அமயத்தில். சீர்நீடிய என்க. சீரால் நீடுதல் - புரமெரித்த அன்று போல் திருவருள் என்றும் நீடியிருத்தல்.

அமர்ந்த - விரும்பி எழுந்தருளிய. அமர்தல் - விரும்புதல்.

அருளால் ஒரு வாய்மை - எழுந்ததுவே என்க. பாவுற்று அலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத்தொடை - பா உறுத்தல் - அலர்தல் - செந்தமிழாதல் - இன்சொலுடைமை - வண்மையுடைமை - தொடையாதல் என்ற தன்மைகள் பொருந்தும் பதிகம்.

பா உறுதலாவது - தமிழ் இலக்கணத்துள் வரம்பு படுத்தும் பாவின் இலக்கணம் முற்றும் அமைதல். அலர்தல் - சொற்பொரு ளமைதியால் அதனுள் அடங்கிவிடாது மேலும் விரிதல்; செந்தமிழ் என்றதனால் தமிழியல் இலக்கணம் பொருந்தப்பெறுதலும், கொடுந்தமிழ் முதலிய பிறவழக்குகள் விரவப் பெறாமையும் பெறப்படும்; இன்சொல் - சொல்லினிமையுடன் பொருளினினிமையும் விரவியிருத்தல்; வண்மை - வளமுடைமையாவது எடுக்கவும் கொடுக்கவும் குறையாது சொற்பொருள் நிறைவுடையதாய் அற்றைநாட் போலவே இற்றைக்கும் தன்னை எண்ணலுறுவார்க்குப் பயனை வரையாது கொடுத்துவருதல்; தொடை - தொடுக்கப்படுவது - கோவை செய்யப்படுவது. பதிகம் - பத்துப்பாட்டுக்களின் தொகுதிக்கு இடும் மரபுப்பெயர். இது சிறுபான்மை 11, 12, பாட்டுக்களினும், அதற்கு மேலும் யாக்கப்படும். புறனடை இலக்கணத்தால் அவையும் பதிகம் எனப்படும். ஆளுடைய பிள்ளையாரது தேவாரப் பதிகங்கள் பெரும்பான்மை பதினொரு திருப்பாடல்களாலும், அவரருளிய பல் பெயர்ப்பத்து - ஏகாபாதம் - வழி மொழித் திருவிராகம் முதலிய சீகாழிப் பெயர்கள் பற்றிய பதிகங்களும், ஆளுடைய அரசுகளருளிய திருவங்க மாலையும், ஆளுடைய நம்பிகளது (தக்கேசி) வாழ்கொளிப்புத்தூர்ப் பதிகமும் முதலியன பன்னிரண்டு திருப்பாடல்களாலும் வந்தன. ஆளுடைய அரசுகளருளிய "சிந்திப்பரியன" என்ற திருவையாற்றுத் திருவிருத்தப்பதிகம் இருபது திருப்பாடல்களாலும், சித்தத்தொகைத் திருக்குறுத்தொகை முப்பது திருப்பாடல்களாலும் இயன்றன காண்க. பதிகம் - பல்வகைப் பொருளையும் தொகுத்துக் கூறுவது என்றும் கூறுவர். இற்றைக்கும் இப்பதிகத்தின் வண்மை அதனை பயில்வோர் பெறும் நோய் நீக்கம் முதலிய திருவருளால் அறியவுள்ளது. "வண்டமிழா னோய்தீர்ந்து" என்ற புராணசாரமும் காண்க.

நாவுக்கரசு - இறைவரால் நாயனாருக்கு இடப்பட்ட பெயர். அதனைத் தேடித் தந்தது அத்திருப்பதிகத் தொடையாதலின் அதன் சிறப்பினை இவ்வாறு விதந்து எடுத்துக் கூறினார். வன்றொண்டன் என்று திருநாமஞ் சூட்டப்பெற்றுத் திருவருள் வழியே நம்பிகள் பாடியருளிய "பித்தாபிறை சூடீ" என்ற முதற்றிருப்பதிகத் தமிழ் இசைச் சிறப்பினை இவ்வாறே 221-ம் திருப்பாட்டில் ஆசிரியர் எடுத்துக் கூறியதும். இறைவனருள் வழியே திருமுலைப் பாலினையுண்டு உயர்ஞானத் திருமொழியினால் ஆளுடைய பிள்ளையார் பாடியருளிய "தோடுடையசெவியன்" என்ற முதற்றிருப் பதிகத்தினை அவர்தம் புராணம் 75முதல் 80வரை உள்ள திருப்பாட்டுக்களாற் சிறப்பித்து எடுத்துக் கூறுவதும் இங்குச் சிந்திக்கத் தக்கன.

உலகு ஏழினும் - நாமம் - நண்ணுக - என்றது எவ்வுலகத்துள்ளாரும் அதனைப் போற்றி யுய்யக்கடவர் என்பதாம். நன் நாமம் - இத்திருநாமத்தைப் போற்றி யுய்ந்த அப்பூதிநாயனார் சரிதத்தை ஈண்டுக் கருதுக. நாயன்மார் திருநாமங்களே தம்மைப் போற்றியவர்களைக் காத்து உய்விக்க வல்லன என்பது திருத்தொண்டத்