தொகையாற் பெறப்படும் உண்மை. "ஞானசம் பந்த ரென்னு நாமமந் திரமுஞ் செல்ல, ஆனபோ தயர்வு தன்னை அகன்றிட" (திருஞான - புரா - 721) என்பதும், "திருநாமக் கோதைதனை மந்திரமாகக் கொண்டு" என்றதும் சிந்திக்க. திருநாவுக்கரசு - ஞானசம்பந்தர் என்ற திருநாமங்களை ஒற்றுநீக்கி, யெண்ணுங்கால் திருவைந்தெழுத்துப்போல ஐந்தெழுத்தாதலும் குறிக்க: "திருநாவுக்கர செனுமோர், சொற்றானெழுதியுங் கூறியுமே யென்றுந் துன்பில் பதம்பெற்றா னொருநம்பியப் பூதி" என்றதும் காண்க : என்று திரு. ந. சிவப்பிரகாச தேசிகர் குறிக்கின்றார். நம்பியாரூரர் என்ற பெயரும் இவவாறே ஐந்தெழுத்தாதல் காண்க. மஞ்சு உறைவான் - மேகங்கள் தங்குமிடமாதல் உலகுக்குதவும் தன்மை குறித்தது. அதுபற்றிக் கூறியதனால் உயிர்க்குதவி குறிக்கப்பட்டபடியாம். வானிடை ஒரு வாய்மை - ஆகாயத்தினிடை ஓர் உண்மைவாக்கு ஒலி. வாய்மை - இறைவரது அசரீரி யென்னும் திருமேனியினின்றும் தோன்றும் சத்தாகிய ஒலி. ஏகாரம் வியப்பின்கண் வந்த அசைநிலை. சத்துப்பொருளுடைய ஒலி என்றலுமாம். அருளப்பாவுற்றவர் - நாமங்கள் - என்பனவும் பாடங்கள். 74 1340. | இத்தன் மைநிகழ்ந் துழிநா வின்மொழிக் கிறையா கியவன் பரு"மிந் நெடுநாட் சித்தந் திகழ்தீ வினையே னடையுந் திருவோ விது?" வென் றுதெருண் டறியா அத்தன் மையனா யவிரா வணனுக் கருளுங் கருணைத் திறமா னவதன் மெய்த்தன் மையறிந் துதுதிப் பதுவே மேல்கொண் டுவணங் கினர்மெய் யுறவே. |
75 (இ-ள்.) வெளிப்படை. இத்தன்மை நிகழ்ந்ததனாலே நாவின்மொழிக்கு அரசராக ஆகிய அன்பரும், "இத்தனை நீண்டகாலமும் சித்தத்தினுள் விளங்கிய தீவினையினையே உடையேனாகிய யான் அடையத்தக்க பெறும்பேறு இதுவோ?" என்று எண்ணியவராய்த், தெளிந்தறியாத அத்தன்மையனாகிய இராவணனுக்கும் அருளும் அருளின் பெருமையாகிய அதன் மெய்த்தன்மையை அறிந்து அத்திறத்தைத் துதிப்பதனையே மேற்கொண்டு மெய்யுற வீழ்ந்து வணங்கினர். (வி-ரை.) இத்தன்மை நிகழ்ந்துழி - வாய்மை வழுந்த அதனால். உழி - என்ற ஏழனுருபு ஏதுப்பொருள் கொண்ட ஐந்தனுருபாக வந்தது. உருபு மயக்கம். நாவின் மொழிக்கு இறை ஆகிய "நாவுக்கரசு" என்று வாய்மை எழுந்ததாகலின், அதனில் நா என்பது ஆகுபெயராய் நாவின்வழி உளதாகும் மொழியைக் குறித்ததென்று பெயர்விளக்கம் செய்தவாறு. இறை - அரசு. ஆகிய - ஆக்கப்பெற்ற. இந்நெடுநாள் - நாள் - நாளும். இழிவுசிறப்புக் குறிப்புட்கொண்ட முற்றும்மை தொக்கது. இத்தனை நீண்டகாலமும் என்றது அதுபோழ்தின் நாயனாரது வயதினையும் குறிப்பா லுணர்த்துவதுபோலும். இவ்வளவு காலமும் திருவருட்கயலுமாய்ப் புன்மையே புரிந்து காலங்கழித்ததுபற்றி இரங்கிக் கூறியபடி. "பயிலாதே பாழேநா னுழன்ற வாறே", "போற்றாதே யாற்றநாள் போக்கி னேனே" முதலிய திருவாக்குக்கள் இக்கருத்தினைத் தருவன. சித்தம் திகழ் தீவினையேன் - தீவினையே திகழ் சித்தத்தேன் என்று விகுதி பிரித்துக் கூட்டுக. |