மறவாது வாழ்வாரைப் பிரான் பிறவாமைக் காக்கும். கூசுதல் - சிவனது மிக்க உயர்வும், தமது மிகக் தாழ்ந்த இழிபும் கருதி அவரை நினைத்தற்கும் அடிமை செய்தற்கும் தமக்கு எட்டுணையும் தகுதியில்லை என்று ஒதுங்குதல். "விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்" (திருவா - திருவெம் - 2). உலகியலிலும் பெரியோர் பெயரைச் சொல்லுதற்கு வாய் கூசும் ஒழுக்கம் காண்க. சிவனை மறவாதிருத்தல் வீடு பெறுதற்குக் காரணமாம் என்பது. அவனலாதில்லை என்று எதிர்மறையாற் கூறியது உறுதிப் பொருள் தருதற்கு. மறவாது வாழ்வார் - மறவாமையே வாழ்வாவது; மறத்தல் பிழையும் தாழ்வுமாம் என்பதும் பெறப்படும். என்றும் பிறவாமை - நித்தியமாகிய வீடுபேறு. அம்மையாரது சரிதவரலாறும் காண்க. 2 பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வாரிடர்கண் டிரானென்ன நிற்கின்ற வீசன்கண் டீரின வண்டுகிண்டிப் பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுரைவா யராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொ னீண்மூடி யந்தனனே. 3 (இ-ள்.) தம்மையே தலைவர் என்று கொண்டு பலநாளும் தொழுவார்களது துயரைக் கண்டு தீர்த்தருளாமலிருக்காதவர் தாமே என்று நிற்கும் ஈசராவார் நீள் சடைமுடி அந்தணராகிய சிவபெருமானேயாம். "தொழுவார் இடர்கண்டு இரான்" என நிற்கின்ற ஈசன் - அந்தணன் என்க. கண்டு இரான் - தரியான் - கண்டு தீர்த்தருள் செய்யாமலிரான். நிற்கின்ற - முக்காலத்தும் நிலைபெறும்; ஈசன் - தலைவன். இம்மூன்று பாட்டுக்களிலும் ஈசன் என்ற நாமத்தாலே போற்றியது, சிவனது முழுமுதலாகிய தலைவராந் தன்மையினையும் ஐந்தொழிற் கருத்தனாய் அருள் புரியும் சிறப்பியல்பினையும் அவனையே பிரானென்று வழிபட்டுத் தாம் பெற்ற பேற்றினை உலகுக்கு உறுதி கூறி வழிப்படுத்தும் திறனையும் குறித்தது. பொரா நின்ற...சடை வண்டுகள் ஒலிக்கும் கொன்றைச் சூழலில் பாம்புகள் நின்று சீறும் சடை. உறைவாய் நச்சுப் பையினையுடையவாய். உறை - (உறு - பகுதி) பை. அரா - பொம்மென்று இரைக்கும் என்க. அந்தணன் - அந்தண்மை ; பேர் அருள் - உடையவன் ஆதலின் இடர்கண்டு இரான் என்று காரணப் பொருள்பட நின்றது. ஏகாரம் - ஈசன்வனலாதில்லை - மறையோன் சிவனே - பிறரில்லை என்று பிரிநிலையோடு தேற்றமுமாம். இறைவரது பேரருளுடைமை குறித்தது. 3 அந்தணனைத் தஞ்சமென் றாட்பட்டா ராழாமே வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த பொன்கண்டாற் பூணாதே கோணாகம் பூண்டானே யென்கண்டாய் நெஞ்சே யினி. 4 (இ-ள்.) அந்தணனாகிய தன்னையே தஞ்சமென்று அடைந்து ஆட்பட்டவர்கள் பிறவிக் கடலில் ஆழ்ந்துவிடாதபடி காத்து அருளவல்லவராகிய இறைவர் திரண்டபொன் பூண்டுகொள்ளாது கோளிழைக்கும் நாகத்தைப் பூண்டாரே! இனி என்னாமோ? நெஞ்சமே. நெஞ்சமே இனி என் (ஆமோ) கண்டாய் என்க. இரக்கமும் அச்சமும் குறித்தது தாயின் அன்பு. அந்தணனை - அந்தணனாகிய தன்னை; ஆழாமே - குறிப்புருவகம். ஆழாமே என்றதனால் பிறவிக் கடல் என்பதும் பெறப்படும். வல்லாளன் - எல்லையில்லாத சத்தியுடையவனாதலால் அடைந்தாரை எல்லாம் காக்க வல்லவன்; அது பிறர்க்கு அரிது என்றபடி, 4 |