| இனிவார் சடையிற் கங்கையென் பாளையங் கத்திருந்த கனிவார் மலைமங்கை காணிலென் செய்தி?கை யிற்சிலையான் முனிவார் திரிபுர மூன்றும்வெந் தன்றுசெந் தீயின்மூழ்கத் தனிவார் கணையொன்றி னான்மிகக் கோத்தவெஞ் சங்கரனே. |
5 (இ-ள்.) ஒரு கணையினால் திரிபுரங்கள் மூன்றும் வேவக் கோத்த எம் சங்கரரே! உமது சடையிற் சூடிய கங்கை என்னும் அம்மையை உமது ஒரு பங்கில் உள்ள உமையம்மை கண்டுகொண்டாராகில் என்ன செய்வீர்? "கங்கை சடையிற் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமை, நங்கை யறியிற்பொல்லாது கண்டீர்" (தேவா, அப்பர் - நாகை) - இப்பாட்டு உமையம்மையைப் போற்றியது. கண்டால் மலைமங்கை ஊடல் கொள்வார் என்பது. உமை அம்மையார் ஊடலைப்பற்றித் திருவந்தாதி 68ஆவது பாட்டுப் பார்க்க. கோத்த - அன்பு எய்யப்படாமல் கோத்த மட்டிலே நிற்கப், புரங்கள் தீ மூழ்கியன என்பது குறிக்க, எய்த என்னாது கோத்த என்றார். சங்கரனைத், தாழ்ந்த சடையானை, யச்சடைமேற் பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை; யங்கொருநாள் ஆவாவென் றாழாமைக் காப்பானை யெப்பொழுதும் ஓவாது நெஞ்சே! யுரை. 6 (இ-ள்.) சங்கரனை - சடையானை - புண்ணியனை - காப்பானை நெஞ்சே! ஓவாது எப்போது முரைப்பாயாக. ஆ! ஆ! - இரக்கக் குறிப்பு. ஒருநாள் - கூற்றுவன் வந்து வேதனைகள் செய்து உயிர் கொண்டுபோகும் நாள் - "உற்றா ராருளரோ உயிர் கொண்டு போம் பொழுது, குற்றா லத்துறை கூத்தனல் லானமக்கு" (அப்பர். அங்கமாலை), "அலமந்த போதாக வஞ்சேலென் றருள் செய்வான்" (திருஞான - ஐயாறு); "சாதனாள்" "துஞ்சும்போது" (தேவா. அப்பர்) ஆழாமல் காப்பான் - துன்பக் கடலினுள் மூழ்கி வருந்தாது நினைப்பித்தல் - ஆழ்ந்து மறந்து படாமல்; "நெஞ்சுளே புகுந்து நின்று நினை தரு நினைவினானே" (திருநே) எப்பொழுதும் - என்றது எக்காலத்தும் என்றும், ஒவாது என்றது இடைவிடாது என்றும் உரைக்க. இவை முறையே காலத் தொடர்ச்சியும் செயலின் றொடர்ச்சியும் குறித்தன. 6 உரைக்கப் படுவது மொன்றுண்டு கேட்கிற்செவ் வான்றொடைமேல் இரைக்கின்ற பாம்பினை யென்றுந் தொடேலிழிந் தோட்டந்தெங்குந் திரைக்கின்ற கங்கையுந் தேனின்ற கொன்றையுஞ் செஞ்சடைமேல் விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே. 7 (இ-ள்.) கங்கையினையும் கொன்றையினையும் வன்னியினையும் சென்னியில் வைத்த வேதியரே! உம்மிடம் சொல்லப்படும் செய்தி உண்டு; அஃதியாது? என்று வினவுவீராகில் செவ்வானம் போன்ற உமது சடையின்மேல் சீறுகின்ற பாம்பினை என்றைக்கும் தொடாதிருப்பீராக! இப்பாட்டுத் தாய்போன்ற அன்பினை விளக்குவது. இதுபற்றித் திருவந்தாதியில் உரைத்தவை பார்க்க. செவ்வான் தொடை - செவ்வானத்தை கற்றையாகத் தொடுத்ததுபோன்ற தொகுதி. இதற்கு இவ்வாறன்றிச் செவ்வானி லுதிக்கும் பிறை என்றுகொண்டு, தொடேல் என்பதற்கு வையாதிரும் என்றுரைத்து மதிபாம்பைக் கண்டஞ்சும் என்று கருத்துரை கூறுவார் முன்னுரைகாரர், |