| வண்டத்தா னாதிரையா னாலால முண்டிருண்ட கண்டத்தான் செம்பொற் கழல். |
10 (இ-ள்.) தலைமையாகிய திருவைந்தெழுத்தினையும் சாதித்து வணங்கித் தலையாயினவற்றை உணர்ந்தவர்கள் மேலாகிய சிவபுவனத் திறைவரும் திரு ஆதிரைநாளுகந்தவரும் திருநீலகண்டரும் ஆகிய சிவபெருமானது செம்பொற்கழலினைக் காண்பர். தலையாய ஐந்து - "ஆதிமந்திரம் அஞ்செழுத்து" (திருஞான - புரா - 698); முத்திபஞ்சாக்கரம்; சாதித்தல் - "அங்செழுத்தாலுள்ள மரனுடைமை கண்டரனை, யஞ்செழுத்தாலர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தாற், குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில், அண்டனாஞ் சேடனா மங்கு" என்ற "விதியெண்ணு மஞ்செழுற்தே" என்ற சிவஞானபோதங் 9ஆம் சூத்திரத்தின் உதாரண வெண்பாவும், பிறவும் காண்க. 1391 - 1394 பாட்டுக்களும் அவற்றின் கீழ் உரைத்தனவும் இங்குச் சிந்திக்க. தலையாயின உணர்ந்தோர் - தலையாயின. சாதனமாகிய சிவஞானத்தினையும், சாதிக்கு முறையினையும், சாதித்தற்கண்வரும் இடையூறுகளை நீக்குமுபாயங்களையும்; உணர்ந்தோர் - குருவருளால் அறிந்தோர்; தலையாய அண்டம் - ஏனையண்டங்கள் அனைத்துக்கும் கிரத்தானமாய்ச் சிவயோக வாழ்வுதரும் சிவபுவனம். கழல் - காண்பர் - என்க. தலையாயின உணர்ந்தோர் - என்றதற்கு "இறை சத்தி பாச மெழின்மாயை யாவி, யுறநிற்கு மோங்காரத்துள்" (திருவருட்பயன் - அஞ்செழுத்தருணிலை - 2) என்றபடி வரும் பொருளை உணர்தல் என்பாருமுண்டு. கழல் காண்டலாவது - வீடுபே றெய்துதல். 10 கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தமைப் பேணலுற்றார் நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினைநிக ரேதுமின்றித் தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம் மானைக்கைம் மாமலர்தூய்த் தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்வினையே. 11 (இ-ள்.) சிவபெருமானது திருவடியைக் கண்டுகொண்டிருக்கும் அடியார்களைப் பேணுகின்ற அடியவர்களது நிழலைக் கண்டபோதே தீவினைகள் நிற்கலாற்றாது நீங்கும்; அற்றாகவே, தமக்கொப்பில்லாத செம்மேனி யெம்பெருமானைக் கையின் மலர் கொண்டு தொழுதலைக் கண்டும் நமது அடும் தொல்வினைகள் நிற்க வல்லனவா? (அல்ல). காணலுற்றார் பேணலுற்றார் - காணுதல் பேணுதல் என்ற செயல்கள் இடையறாது நிகழ்தல் குறித்தன. காணல் உள்ளே கண்டுகொண்டிருத்தல் பேணுதல். பலவாற்றாலும் வழிபடுதல். அம்மையார் புராணம் 15ஆவது பாட்டு (1731) பார்க்க. பேணலுற்றார் நிழல் ஆறனுருபு விரிக்க. நிழற்கண்ட போழ்தத்து - நிழலைத் தானும் கண்டபோதே; வினை நீங்கும் எளிமை குறித்தது. அடியாரக யாரது நிழலைக் கண்டவிடத்தே நீங்கும் வினை, சிவனைத் தொழுவார்பால் நில்லாது அகலும் என்பதும் சொல்லவும் வேண்டுமோ? என்றபடி. அடியாரைப் பேணுதலும் சிவனைத் தொழுவதுமே வினை நீங்குதற்குரிய உபாயம் என்பதும் உடனே விளக்கப்பட்டன. இப்பாட்டு அம்மையார் சரித அகச்சான்று. 11 தொல்லை வினைவந்து சூழாமுன் றாழாமே யொல்லை வணங்கி யுமையென்னு - மெல்லியதோர் கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு நீற்றானை நெஞ்சே நினை. 12 |