(இ-ள்.) தொல்லைவினை வந்து சூழ்ந்துகொள்வதற்கு முன்னமே தாமதியாமல் விரைந்து வணங்கி, நெஞ்சமே! உமையொரு பாகரும், இயமனைக் காய்ந்த வரும், வாய்ந்து விளங்கும் திருநீற்றினையுடையவரும் ஆகிய சிவபெருமானை நினைப்பாயாக. வினைவந்து சூழாமுன் - பழவினை வந்து சூழ்தல் உறுதி; சூழ்ந்தபின் நினைத்தல் இயலாது; ஆதலின் வினை விளையும் அக்காலத்திற்கு முன்பே நினை என்பது. தொல்லை வினை - முற்செய் வினை; நினையவொட்டாது தொல்லை செய்யும் வினை என்றலும் குறிப்பு. வந்து சேரும் பருவத்தால் வந்து. தாழாமே - ஒல்லை - ஒரு பொருட் பன்மொழி மிகுதி குறித்தன. "உலைவின்றித் தாழாது" (குறள்). உமை கூறு - கருணையினையும், கூற்றம் காய்தல் - ஆற்றலையும், நீறு - அழியாமையையும் குறித்தன. கூற்று - என்னாது கூற்று உருவம் - என்றது வினை தடுக்கலாகாமையின் அதன் வேதனை யில்லாமற் செய்பவன் என்பதாம். "உப்பக்கம் காண்பர்" (குறள்) நினைத்து வணங்கு என்றது - நினையா நின்று வணங்குக என்றதாம். ஒன்றுபட்ட நினைவு. 12 நினையா தொழிதிகண் டாய்! நெஞ்சமே! யிங்கொர் தஞ்சமென்று மனையா ளையுமக்க டம்மையுந் தேறியெர ராறுபுக்கு நனையாச் சடைமுடி நம்பனந் தாதைநொந் தாதசெந்தீ யனையா னமரர் பிரானண்ட வாண னடித்தாலமே. 13 (இ-ள்.) நெஞ்சமே! மனையாளையும் மக்களையும் இங்கு ஒரு தஞ்சமென்று தேறிக்கொண்டு, (அதனால் ) நம்பன் - தாதை - தீ அனையான் - பிரான் - அண்டவாணன் அடித்தலமே இங்கு ஒரு தஞ்சமென்று நினையாமல் விட்டுவிடாதே! நினையாது ஒழிதி! - நினையாமல் விட்டுவிடாதே. "விடுதி கண்டாய் - விடிலோ கெடுவேன்" (திருவா - நீத் - விண் - 23). ஒழிதி - ஒழியாதே. ஒழிதியோ? என்ற வினாக் குறிப்புமாம். இங்கொர் தஞ்சமென்று என்பதனைச் சிங்கநோக்காக வைத்து, இங்கொர் தஞ்சமென்று - நினையா தொழிதி என்றும், இங்கொர் தஞ்சமென்று - தேறி என்றும் முன்னும் பின்னும் கூட்டுக. தேறி - பொய்யை மெய்யென்று தெளிந்து; எண்ணும்மைகள் இழிவு சிறப்பின் கண்ணும் வந்தன. ஆறுபுக்கும் நனையாச் சடை - உயர்வு சிறப்பும்மை தொக்கது. நனைதல் - ஈரம் தெவிட்டி வழிதல்; நம் தாதை - கயிலையில் இறைவரை அம்மையார் அப்பா! என்ற சரித அகச்சான்று. அடித்தலமே இங்குத் தஞ்சம் என்று என்க. ஏகாரம் பிரிநிலை. நினையா தொழுதி என்று பாடங்கொண்டு நினைந்து வணங்கு என்று பொருள் கொண்டும், தேறி - என்பது தெறு என்னும் பகுதி விகாரப்பட்ட முன்னிலை வினைமுற்று என்று கொண்டு நீக்கு என்று பொருள்கொண்டும் முடிப்பர் முன் உரைகாரர். அதன் பொருத்தம் ஆராயத் தக்கது. 13 அடித்தலத்தி னன்றாக்க ணைந்நான்கு தோளு முடித்தலமு நீமுரித்த வாறென்? - முடித்தலத்தில் ஆறாடி! யாறா! லனலாடி! யவ்வனலில் நீறாடி! நெய்யாடி! நீ. 14 (இ-ள்.) இறைவரே! அன்று அரக்கனது இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும் உமது திருவடியினால் மிதித்து முரித்தவாறு என்னே? நீ முரித்தவாறு என்றவிடத்து நீ என்பது அரக்கனைத் திருவடியால் அடர்த்த அவசரத்திற்கும், பின்வந்த நீ என்பது ஆறாடுதல் - அனலாடுதல் முதலாகவுள்ள பேராற்றல் படைத்த தம் இயல்பாகிய அவசரத்திற்கும் வந்தன. பின்வந்த நீ |