| உத்தமராய் வாழ்வா ருலந்தக்கா லுற்றார்கள் செத்த மரமடுக்கித் தீயாமு - னுத்தமனாய் நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்றிறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து. |
20 (இ-ள்.) செல்வம் முதலிய சிறப்புடனே வாழ்வார்களும் ஒருநாள் இறந்து போவார்கள்; அப்படி இறந்து போனால், அவர்களுடலைச் சுற்றத்தார்கள் காய்ந்த விறகடுக்கிச் சுட்டு விடுவார்கள்; (அதுபோல் நீயும் ஒருநாள் இறந்துபட) உன் உடம்பையும் சுடுவதற்கு முன்னே, சர்வ உத்தமராகக் கடல் நஞ்சுண்ட நெய்யரடியாகிய சிவபெருமானது திறத்தினையே, ஆழ்ந்த கருத்துடைய மனமே! நீ விரும்பிக் கேட்பாயாக. உத்தமர் - செல்வம் குணம் முதலிய சிறப்புடையவர்கள். வாழ்வார்களும் என்று சிறப்பும்மை தொக்கது. உலந்தக்கால் - தீய்ப்பார்; அவ்வாறு உலந்தால் அக்காலத்து என்க. தீய்த்தல் - சுடுதல் சிறப்புடையார்களதுடல் என்றெண்ணி அந்த உடம்பை வைத்திருக்காமல், சுட்டு விடுவார்கள். முன் - அதுபோல் உன் உடலையும் சுடுவதற்கு முன். செத்த மரம் - உலர்ந்த விறகு. "சிறுவிறகாற்றீமூட்டிச் சொல்லா நிற்பர்" (தேவா). உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் என்றும், உத்தமனாய்...நெய்யாடி என்றும் கூறியவதனால் உத்தமர் என்றிருக்கின்ற ஏனை யாவரும் இறந்துபட உத்தமனாகிய சிவபிரான் ஒருவரே நஞ்சுண்டும் இறவாமல் என்றுமிருப்பவர் என்பதும், அவன் திறமே கேள் என்றதனால் அதனால் நீயும் இறவாமையும் பிறவாமையுமாகிய நிலைபெற்ற இன்பம் பெறலாம் என்பதும் குறிப்பு. கிளர்த்து - அன்புடனே. "கிளர்ந்துந்து" என்று தொடங்கிய இம்மாலையின் ஆதியினையே அந்தாதித் தொடையாக அந்தத்தில் வைத்து முடித்தவாறும், அம்முதற்றிருப்பாட்டின் கருத்தினையே தொடர்ந்து முடிவுபடுத்திக் காட்டியவாறும் கண்டுகொள்க. 20 திருவிரட்டைமணி மாலை உரை முற்றிற்று____ |