பக்கம் எண் :


962திருத்தொண்டர் புராணம்

 

அம்மை மூத்த திருப்பதிகம் - 2

திருவாலங்காடு

(நடனத்தைப் போற்றியது)பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

எட்டி யிலவ மிகை சூரை காரை படர்ந்தெங்குஞ்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழக னாடுமே.

1

நிணந்தா னுருகி நிலந்தா னனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெரிந்து சூழ நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கண் மாந்திக் களித்த மனத்தவா
யணங்கு காட்டி லனல்கை யேந்தி யழக னாடுமே.

2

புட்கள் பொதுத்த புலால்வெண் டலையைப் புறமே நரிகவ்வ
வட்கென் றழைப்ப வாந்தை வீச வருகே சிறுகூகை
யுட்க விழிக்க வூமன் வெருட்ட வோரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணு மிறைவன் பெயரும் பெருங்காடே.

3

செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி யுறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபே யிரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமா னாடுமே.

4

முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி யுழைமான் றோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி யிடமு மதுவே யாகப் பரம னாடுமே.

5

வாளைக் கிளர வளைவர லெயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலு முதுகாட்டிற்
றாளிப் பனையி னிலைபோன் மயிர்க்கட் டழல்வா யழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ டியம்பக் குழக னாடுமே.

6

நொந்திக் கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி யமரர் முழவி னோசை முறைமை வழுவாமே
யந்தி நிருத்த மனல்கை யேந்தி யழக னாடுமே.

7

வேய்க ளோங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையு
ளோயு முருவி லுலறு கூந்த லலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கண் மாந்தி யணங்கும் பெரும் காட்டின்
மாய னாட மலையான் மகளு மருண்டு நோக்குமே.

8

கடுவ னுகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமா
யிடுவெண் டலையு மீமப் புகையு மெழுந்த பெருங்காட்டிற்
கொடுவெண் பிறையும் புனலுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் டுடியும் பறையுங் கறங்கப் பரம னாடுமே.

9

குண்டு வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பே
யிண்டு படர்ந்த விருள்சூழ் மயானத் தெரிவா யெயிற்றுப்பேய்
கொண்டு குழவி தழுவ வெட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைக டாழ விமல னாடுமே.

10

சூடு மதியஞ் சடைமே லுடையாக சுழல்வார் திருநட்ட
மாடு மரவ மரையி லராத்த வடிக ளருளாலே
காடு மலிந்த கனல்வா யெயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி யாடப் பாவ நாசமே.

11

திருச்சிற்றம்பலம்

______