(504) என்பவை காண்க. எனா - என்று தெளிந்து. மனமார் - தரம் மனமார மகிழ்ந்து வைத்த என்றும், அடைந்தோர்களது மனங்குளிர - மகிழ - என்றும், அத்திருநாவுக்கரசினது மனமும் பொருந்தும் என்றும் உரைக்க நின்றது. புனற்பந்தர் - இன்பம்பற்றி ஏனைய அறங்களையும் கொள்க; திருநாவுக்கரசரது திருமனம் பொருந்திச் சரித விளைவுக்குக் காரணமாய் நின்ற சிறப்புப்பற்றி இதனை எடுத்துக் கூறினார். வாழ்த்தி வைத்தல் - வாழ்த்தும் வகையாலே வைத்தல்; வாழ்க! என்று எழுதி வைத்தல் என்றலும் அமையும்; வைத்துப் பெற்றவன் - என்க. வைத்து - வைத்ததன் பயனாக என்று காரணப் பொருளில் வந்தது. தண்ணீர்ப் பந்தரில் அரசுகளின் திருப்பெயர் இட்டதனால் அரசுகளது தமிழில் தமது பெயரை இடப்பெற்றவர். வண்தமிழ் - தேவாரம். வண்மை - கேளாமலே உயிரையும் மீட்டுத்தரும் வள்ளன்மை. விடந்தீர்த்து மகனை மீட்ட சரித வரலாற்றுக் குறிப்பு ஏகாரம் பிரிநிலை. குவ்வுருபு ஏழன் பொருளில் வந்தது. இடுதல் - பொறித்து வைத்தல். பெற்றவன் - பெரும்பேறு என்பது குறிப்பு. தமிழ் - திருப்பழனத் திருப்பதிகத்தினுள் "அஞ்சிப் போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதிக்குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய்" என்றது. 1476 பாட்டும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. திங்களூர் - அப்பூதியாரது தலம். வேதியன் - அவரது மரபு. இனமா - அடியார் இனத்தவராக வைத்து; "பித்துப் பத்தரினத்தாய்" (போதம்). பெயரும் சரித வரலாற்றுக் குறிப்பும் தொகை நுல் காட்டிற்று; ஊரும், மரபும், பேரும், செய்த திருத்தொண்டுகளின் வரலாறுகளும், பெற்ற பேறும் வகைநூல் வகுத்துக் காட்டிற்று; இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டுகொள்க. அவற்றுள் ஊரும் மரபும் சில சிறப்புயல்புகளும் முன்னரே திருநாவுக்கரசு நாயனார் புராணத்துள் 200ஆவது திருப்பாட்டு முதல் 211 ஆவது திருப்பாட்டு வரை (1465 - 1476) உள்ள பதினொரு பாசுரங்களில் விரிக்கப்பட்டன; ஏனையவை இப்புராணத்தினுள் விரித்துரைக்கப் பெற்றன. முன் உரைடத்தவை ஆளுடைய அரசுகளின் சரிதச் சார்பும், ஈண்டுரைப்பவை அப்பூதியார் சரிதச்சார்பும் பெரும்பான்மைத் தொடர்புபற்றி முறையே அங்கும் இங்குமாக விரிக்க வைத்தவாறும் கண்டு அமைத்துக்கொள்க. 1783.(இ-ள்.) தாண்டவம்...அன்பர் - பெருங்கூத்து இயற்றுதலில் வல்லவராகிய தம்பெருமானுக்கு அன்புடையவர்; ஈண்டிய புகழின் பாலார். பொருந்திய புகழினையுடையவர்; எல்லையில் தவத்தின் மிக்கார் - அளவில்லாத தவத்தினான் மிக்கவர்; ஆண்டசீர் அரசின் பாதம் அடைந்து - சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட சிறப்பு மிக்க திருநாவுக்கரசு நாயனாரின் பாதங்களையே சார்பாக அடைந்து; அவர்...உள்ளார் - அவர் தம்மை அறியா முன்னே காணத்தக்க காதல் மிக்கதனால் உள்ளங் கலந்த அன்பு கொண்டவராக வுள்ளவர். (வி-ரை.)தாண்டவம் ஐந்தொழில் அருட்கூத்து. வல்ல - ஏனை எவர்க்கும் இயலாதது என்றதும், சிவபெருமானுக்கு எளிய விளையாட்டாவது என்றதும் கருத்து; தம்பிரானார்க்கு அன்பர் - அப்பூதியார் திருநாவுக்கரசு நாயனார்பாற் கொண்ட அன்பின் றிறம்பற்றி முன் (1465 - 1476) அறிவித்த ஆசிரியர். அவ்வாறு அவரது அடியார் பத்தியினால் அறியப்பட்ட இறைவன்பாலன்புடைமையினை ஈண்டுமுதற்கண் எடுத்துக்கூறினார். "அடியவர்க் கன்பில்லார் - ஈசனுக் கன்பில்லார்" (12ஆவது சூத் - அதி. 2 - 2) என்பது சாத்திரம். அவரது இவ்வியல்பு பற்றி "அப்பூதிக குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்" என்று தேவாரத்திற் போற்றப்பட்டது மிக்கருத்து. |