தாலும் பொதுக் கேள்வியாலும் ஆயிற்று என்றும், இங்கு நாமத்தால் அறங்கள் செய்து வாழ்ந்தது அடிமையும் அருளும்பற்றிய சிறப்புக் கேள்வியால் என்றும் கொள்க முன்னர் விளைந்த அன்பு மேன்மேலும் கேட்கக் கேட்க முதிர்ந்து மேலும் மேலும் பத்திச் செயல்களுக்குக் காரணமாயிற்று என்பதாம் - "முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்...."(தாண்) என்ற நாயனாரது திருவாக்கே இவ்வாறு அன்புக் கேள்வியால் அன்பு பெருகி முதிரும் நிலையினை விளக்குதல் காண்க. முன்னர், உயிர்ச் சார்பு பொருட் சார்புகளுக்கு அரசுகளின் நாமஞ்சாற்றி அழைத்தல் தாம் பலகாலும் சொல்லிப் பயன்பெறும் பொருட்டும், அத்திருநாமத்தால் அறங்கள்செய்தல் தன்போற் பிறரும் பயன்பெறுதற் பொருட்டும் என இவ்வாறு அன்பு விரிந்து செல்லும் நிலையும் காண்க. நாமத்தாற் செய்தலாவது - அவரது திருநாமத்தை அறச்சாலையில் எங்கும் எழுதி இஃது அவரது தருமம் என வழங்க வைத்தல். மடங்கள் - தண்ணீர்ப் பந்தர்கள் - முதலாவுள்ள முடிவிலா அறங்கள் - நிலைபெற்ற அறங்கள். நிலைபேறாவது சிவனடிச்சார்பாகிய நிலைத்த பயனைத் தந்து நிற்றல். மடங்கள் - அடியார் இரவில் தங்குதற்கும், தண்ணீர்ப்பந்தர் வெயிலில் இளைப்பாறுதற்குமாம். திருநாவுக்கரசர் பெயரால் திருமடங்களைப் பலர் அமைத்தது பழங் கல்வெட்டுக்களால் அறியப்படும். (திருச்சி 644; தஞ் - 843; செங் (4131 தந்-219-17, திருநாவுபுராசரித ஆராய்ச்சிக் குறிப்பு பக் 772 பார்க்க) - மடங்கள் - தண்ணீர்ப் பந்தர்கள் - சாலை - குளம் - சோலை முதலியவை பசு புண்ணியங்களாகிச் சுவர்க்காதி போகங்களைப் பயப்பித்துப் பின்னும் பிறவிக் கேதுவாயின; ஆனால் இங்கு அவை வாகீசராகிய குரு வழிபாட்டின் பாற்பட்டுச் சிவனடிமைத் திறத்தினிற் செய்யப்பட்டமையால் அவ்வாறு ஏனையோர் செய்வன போலப் பசுபுண்ணியங்களாயொழியாது பதிபுண்ணியங்களாக மாறி முத்திக் கேதுவாயின. ஆதலின் முடிவிலா அறங்கள் என்றார். முறைமையால் - ஆண்டானடிமைத் திறத்தினிற்கும் அம்முறைமையால். அன்பர் - வாழுநாளில் - திருநாவுக்கரசர் - திங்களூர் - மருங்கு - வழியே மேவுவாராய்த் - தண்ணீர்ப் பந்தர் வந்தணைந்தார் - என்று அம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. 1786. (வி-ரை.) திருநாவுக்கரசு நாயனார் புராணத்தினுள் அப்பெருமான் திங்களூருக்கு எழுந்தருளும் சரிதப்பகுதி கூறும், "நாவினுக்கு வேந்தர்தர மேவினார், செப்பருஞ்சீ ரப்பூதி யடிகளூர் திங்களூர்" (1465) என்ற, 200ஆவது பாட்டினைத் தொடர்ந்து எடுத்து அச்சரிதத்தினையே அப்பூதியார்பாற் சரிதத்தை வினை விரிப்பதாதலின் அந்த யாப்பினையே தொடர்ந்து எடுத்துக்கொண்ட கவிநயமும் அமைதியும் காண்க. பொருப்பரையன் மடப்பிடி - பார்வதி. பிடி - பெண் யானை. பிடி போன்றார் விநாயகரது திருவவதாரத்தின் பொருட்டுச் சித்திரமாக எழுதப்பட்ட பிடிவடிவ ஓங்காரத்தை அம்மையார் திருநோக்கம்பற்றிய வரலாறு காண்க. "பிடியதனுருவுமை கொள" (தேவா). சிவக் களிறு களிறு - ஆண் யானை. பிடி - என்றதற் கேற்பக் களிறு என்றார். பிடி வடிவ ஓங்காரத்தினின்று திருநோக்கருளினால் விநாயகரை வரவருளினார் வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருள்வார் என்ற பயன் குறிப்பாலுணர்த்தியது காண்க. பணி செய் - கைத்திருத்தொண்டும் சொன்மாலை புனைதலும் செய்த. |