ஒருப்படு காதலில் - பதி - வணங்கும் - ஒருப்படுகாதல் - என வொருமைப்பாடு வருவதற்குக் காரணமான காதல். ஒருப்படுதற்குப் பதி வணங்குதல் சாதனமாம் என்பதும் குறிப்பு. உடையவர் - தலைவர். திங்களூர் மருங்கு - திங்களூரின் பக்கத்து. வழி மேவுவார் - வழியிற் செல்வாராகி; முற்றெச்சம். மேவுவார் - அணைந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. உடையவர் பதி வணங்கும் கருத்தினொடு வழி மேவினாரேயன்றித் திங்களூர் மேவுங் கருத்திலர் என்பதும், ஆயினும் அங்குச் சேர்ந்து நிகழ்ந்த பின்வரலாறுகள் உடையவ ரருளின்வழி நிகழ்ந்தன என்பதும் குறிப்பு. 4 1787. (வி-ரை.) இப்பாட்டு அப்பூதியடிகள் செய்த தண்ணீர்ப் பந்தரின் சிறப்பினை அவ்வாறே நம் கண்முன் தோன்றும்படி எழுதிக் காட்டுகின்ற ஓவியம். அன்றியும், அவ்வாறு தண்ணீர்ப் பந்தர் இயற்றுவோர் பார்த்துப் படியெடுத்தொழுக மனங்கொள்ளும் படிப்பினையும் கற்பிக்கின்றது. அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் - தண்ணீர்ப்பந்தர் வைப்பதற்குத் தகுதியான இடம் தேடிக்கொள்ளுதல் முதலிற் செய்யவேண்டியதாதல் குறிப்பு. Site selection என்பர் நவீனர். நீரும் நிழலும் வேண்டுவார் வழி போவாராதலின் அவர் செல்லும் வழியில் இது செய்யத் தக்கது. பெறுவோரிடத்தை நாடிச் செய்வோர் சென்று அறஞ் செய்தலும், கேளாமலே செய்தலும் அறத்தின் சிறப்பாம். அளவில் சனம் - என்றதனால் மக்கள் திரள் திரளாகச் செல்லுதலும், செலவு ஒழியா என்றதனால் நாளில் எந்நேரமும் செல்லுதலும், வழிக் கரையில் என்றதனால் அவ்வழியின் முன்புற மருங்கில் அமைதலும் பெறப்பட்டன. Much frequented public high way என்பர் நவீனர். இரவிலும் சனம் சென்றுகொண்டிருத்தல் நல்ல பெரிய சாலைகளில் காணப்படும் இயல்பு. அந்நேரத்திலும் வழிபோவார் தங்கி இளைப்பாறு மிடமாய் இப்பந்தர் உதவுமென்பது. இங்கு அப்பூதியார் தாம் தங்கும் இடத்திற்கருகாக இடம் தேடாது அதற்குச் சில தூரத்தில் சனம் செலவொழியா வழிக் கரையை நாடிப் பந்தர் அமைத்தது இக்கருத்து. ஆனால் அவரது திருமனையை இதனை நணுக வைத்துப் பலவாறும் தாமே கண்காணித்து வந்தனர் என்பதும் (1790) அறியப்படும். வழிக்கரை - இவ்வழி திருநல்லூரிலிருந்து திருப்பழனம் வழியாகச்செல்லும் பெரும் பாதை என்பது கருதப்படும். காவிரிக்குத் தென்கரையில் இத்தண்ணீர்ப் பந்தர் இருந்த இடம் இன்றும் அறியப்பட்டு விழாக் கொண்டாடப்படுகிறது. அருளுடையார் உளம் அனைய தண் அளித்தாய் அகற்றி - என்க. அருளுடையார் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர். பரிவு அகற்றுதலில் நீர்ப்பந்தர் அருளுடைய பெரியோர்களது உள்ளம்போலக் குளிர்ந்த அளியுடன் விளங்கிற்று பந்தர் அளியுடன் பரிவு அகற்றுதலாவது அங்குள்ள எல்லாப் பொருள்களும் வந்தடைந்தார்களது பரிவு மாற்றுதலில் ஒத்துக் குளிர்ச்சி செய்து நிற்றல். அங்குள்ளாரது அளியுமாம். கருணையுள்ள பெரியோர் உள்ளம் பந்தரின் அளியினுக்கு உவமையாயிற்று. வினைபற்றி வந்த உவமம். "பெரியோ ருள்ளம் வோங்குநிலைத் தன்மையவாய்" (1165) என்ற விடத்துரைத்தவை என்க. குளம் நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்தூங்கும் பரப்பினதாய் - குளமும் தடமும்போல என்க. குளம் - இயற்கை யமைப்புகளுடைய பெரு நீர்நிலை; தடம் அவ்வப்போது நீர் நிறைக்கப்படும் சிறு வாவி; குளம் - பயிர்களுக்கும, தடம் - ஏனை மக்கள் முதலிய உயிர்களுக்கும் ஆவன. குளிர்தூங்கும் பரப்பு - குளிர்ச்சி |