நிலைத்துள்ள நீர்ப்பரப்பு. குளம் - வெல்லம் என்ற குறிப்பும் தந்து பானகம் போன்று இனி நீர்கொண்டதோர் நீர் நிலை என்ற பொருளும்பட நிற்றல் காண்க. வெயிற் காலத்து நீர்ப் பந்தர்களில் வெல்லம் கலந்த பாகனம்அளிக்கும் வழக்கும் காண்க. வளமருவு நிழல் தரு - தண்ணீர்ப் பந்தரினில், குளிர்ந்த நீரும் அதனோடொப்பக் குளிர்ந்த நிழலும் வேண்டப்படுவன. வழிவரும் தாகத்தைப் போக்க நீரும், வெப்ப விளைப்புப் போக்க நிழலும் உதவுவன. தண்ணீர்ப் பந்தல் அறம் செய்வோர் இப்பாட்டிற் கண்ட இன்றியமையாத தன்மைகளைக் குறிக்கொண்டு அறமியற்றுவார்களாயின் நலம் தரும். வழிமேவுவார் - வந்தணைந்தார் - அவ்வழிச் செல்வார் இதனை வந்தணையாமல் விலகிச் செல்லலாகா வகையில் அமைந்தது என்பதாம்; பதிவணங்கும் விருப்பினுடன் செல்லும் நாயனார் வழியில் தாகம் அயர்வு முதலியவற்றை நோக்காது செல்வது உணரப்படும் ஆதலின், 1569-வது பாட்டுப் பார்க்க. 5 1788. | வந்தணைந்த வாகீசர் மந்தமா ருதசீதப் பந்தருட னமுதமுமாந் தண்ணீரும் பார்த்தருளிச், சிந்தைவியப் புறவருவார், "திருநாவுக் கர" செனும்பேர் சந்தமுற வரைந்ததனை யெம்மருங்குந் தாங்கண்டார். |
6 (இ-ள்.) வந்தணைந்த...பார்த்தருளி - அவ்வாறு அங்கு வந்து அணைந்த திருநாவுக்கரசு நாயனார் தண்ணிதாய் மெல்லிதாய் வீசு மிளந்தென்றற் காற்றினையுடைய குளிர்ந்த பந்தருடனே அமுதமாகிய தண்ணீரும் பார்த்தருள்செய்து; சிந்தை வியப்ப உற வருவார்- திருமனத்தினுள் வியப்புப் பொருந்த வருவார் "திருநாவுக்கரசு" எனுங்...கண்டார் - திருநாவுக்கரசு எனும் பெயரைச் சந்தம் பொருந்த எழுதியதனை அங்கு எப்பக்கத்திலும் தாம் கண்டருளினர். (வி-ரை.) மந்தமாருதம்...பார்த்தருளி - மந்தமாருதம் - மெல்லியதாய் வீசும் இளந்தென்றல். தண்ணீர்ப்பந்தர் நிகழ்வது வேனிற் காலமாதலால் அது இளந்தென்றல் வந்துலவும் காலமாம். "குளிர்சார லிடைவளர்ந்த கொழுந்தென்றல். அங்கணையத் திருவாரூ ரணிவீதி யழகரவர், மங்கலநாள் வசந்தமெதிர் கொண்டருளும் வகை" (ஏயர் - புரா - 270). சீதப்பந்தர் - குளிர் நிழலுடைய பந்தர். அமுதமுமாம் தண்ணீரும் - அமுதமுமாம் - வேனிற் பரிவாகிய தாகம் தீர்த்து உயிரைக் காத்தலேயன்றிச் சுவையாலும் அமுதமுமாம் நீர் என்பார் அமுதமுமாம் என்றார். உம்மை - பயனாலன்றிச் சுவையானும் என இறந்தது தழுவிய எச்சம். தண்ணீரும் - பந்தருடனே நீரினையும்; உம்மை எண்ணின்கண் வந்தது. பார்த்தருளி - காற்றும் நிழலும் நீரும் என்றவற்றைப் பெருளாகக் காணாராயினும் ஓரருளிப்பாட்டின் குறிப்பினாற் பார்த்தனர் என்பது. சிந்தை வியப்பு உற - வியப்பாவது பந்தர் அமைந்த இடத்தின் தகுதியும், பிற அமைப்புக்களின் சீரும் நலமும், இத்துணையும் நாடிவைத்த கருத்தின் அகலமும், பிறவும் கண்டு களிகூரும் மன நிகழ்ச்சி. எனும் பேர் எம்மருங்கும் சந்தமுற வரைந்ததனைத் தாம் கண்டார் - என்க. எம்மருங்கும் - எல்லாப் பக்கங்களிலும் காணும்படியாக. சந்தமுற - சந்தம் பொருந்த - புகழ் விளங்க என்றலுமாம். வரைந்ததனைத் தாம் கண்டார் - வரைந்திருத்தலைத் தாமே கண்டனர். தாம் பிறர் சொல்லக் கேட்டலன்றித் தாமே நேரில்; தன்னை என்பது தனை என நின்றது. |