இதுவரை கூறாது, இங்கு அப்பந்தர் அறிந்தார்களது வாக்கில் வைத்து அப்பருக்கு விடை கூறுமுகத்தால் முதன் முறையாகக் கூறிய சிறப்புக் கவிநயமம் காண்க. ஏழாவது பாட்டில் அமைந்த தெய்விகச் சிறப்பும் கருதுக. "யார்?" என்ற வினாவுக்கு அவர் பெயரையும் பிற நலன்களையும் உடனே சேர்த்துக் கூறி மேல் வினாவுக்கு இடமின்றிச் சொல்லிய விடையின் அமைதியும் காண்க. தப்பின்றி எங்கும் உள - வேண்டிய எவ்விடத்தும் தவறாதும், அமைக்க வேண்டிய முறைகளில் தவறாதும் உள்ளன. சாலை - நிழல் அமைந்த வழிகள். கா - சோலைகள். குளம் - தண்ணீர்ப் பந்தரின் வந்து பரிவு தீர்ந்தார்களேயன்றி, மற்றும் எல்லாரும் எவ்வுயிரும் எக்காலத்தும் பிறதொருவர் உதவி வேண்டாது தம்மிச்சையாற் பரிவு தீர்த்துக்கொள்வதற்கும் பயிர்களுக்கும் உதவும்பொருட்டும் காவும் குளமும் அமைத்தனர் என்க. அறிவார்கள் - ஆண்டவரசின் பெயரால் - என்பனவும் பாடங்கள். 7 1790. | என்றுரைக்க, வரசுகேட் "டிதற்கென்னோ கருத்"தென்று நின்றவரை நோக்கி, "யவ ரெவ்விடத்தா" ரெனவினவத், துன்றியநூன் மார்பருமித் தொல்பதியார்; மனையின்கட் சென்றனரிப் பொழு;ததுவுஞ் சேய்த்தன்று; நணித்"தென்றார். | (இ-ள்.) என்று உரைக்க அரசு கேட்டு - மேலே கண்டவாறு அவர்கள் சொல்ல அதை அரசுகள் கேட்டு; இதற்கு...வினவ - இதற்கு என்ன கருத்து என்று எண்ணிக்கொண்டு அங்கு நின்றவர்களை நோக்கி "அவர் எவ்விடத்துள்ளார்?" என்று கேட்க; துன்றிய...என்றார். "பூணுநூல் பொருந்திய மார்பினையுடைய அவரும் இந்தப் பழய பதியினராவர்; இப்பொழுதுதான் மனையின்கண்ணே சென்றனர்; அந்த மனை உள்ள இடமும் நெடுந்தூரமன்று; அணிமையிலுள்ளது" என்றனர். (வி-ரை.) இதற்கு என்னோ கருத்து - என்று - இவ்வாறு இப்பெயரால் இத்தருமங்களைச் செய்வதற்கு ஏதோ கருத்து இருத்தல்வேண்டும்; அது யாதுஎன்று தம்முள் எண்ணிக்கொண்டு. என்று - என்றெண்ணி. எவ்விடத்தார் என வினவ - இடம் - இருக்கும் பதியும் மனையும் என்ற இருபொருளும் தருதலின் அவ்விரண்டும்பற்றி அவர்கள் விடை கூறினர். "துன்றிய...நணித்து" என்றார் - "எவ்விடத்தார்?" என்ற வினாவினால் அவரைக்காண விரும்பினர் இவ்வடியவர் என்றுகொண்ட அவர்கள் அவ்வினாவுக்கு உள்ள விடைமட்டி லமையாது அவர் சென்று காண்பதற்குரிய எல்லாச் செய்திகளையும் தொகுத்து மேல் வினாக்களுக்கு இடமில்லாதவாறு கூறிய அறிவுடை நயம் காண்க. அடியார்களிடத்துக் கொண்ட அன்பின் றிறமும் குறிப்பு. 116வது பாட்டில் மந்திரி கூறும் விடையின் குறிப்புக்கள்போலக் கண்டுகொள்க. துன்றியநூன் மார்பர் - என்றதனால் அவர் மறையவர் மரபினர் என்ற அடையாளம் கூறியபடி; இத்தொல்பதி - இவ்வூரினர் என்றதனால் சென்று காணும் மனவெழுச்சி யைப் பலப்படுத்தியபடி; மனையின்கண் இப்பொழுது சென்றனர் என்றதனால் இதுகாறும் இங்கிருந்து அடியவர்க்கு ஆவனவற்றைத் தாமே செய்தனர் என அவரது அறத்தின் இயல்பும், எளிமையும், அன்பும் புலப்படுத்தி அவரைக்காணும் ஊக்கத்தை மிகுதிப்படுத்தியபடி; அதுவும் சேய்த்தன்று - நணித்து என்றதனால் அதனை விரைவுபடுத்திச் செல்லும் அடையாளம் காட்டி வழிப்படுத்தியபடி என்றிவ்வாறு கண்டுகொள்க. |