பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்973

 

என நிறைந்து - என நினைத்து - என்பனவும் பாடங்கள்.

8

1791.

அங்ககன்று முனிவரும்போ யப்பூதி யடிகளார்
தங்குமனைக் கடைத்தலைமுன் சார்வாக, வுள்ளிருந்த
திங்களூர் மறைத்தலைவர் "செழுங்கடையில் வந்தடைந்தார்
நங்கள்பிரான் றமரொருவ" ரெனக்கேட்டு நண்ணினார்.

9

(இ-ள்.) அங்கு அகன்று...சார்வாக - அவ்விடத்தினின்றும் நீங்கி முனிவராகிய திருநாவுக்கரசு நாயனாரும் போய்அப்பூதி யடிகளார் வாழும் திருமனையின் முன் கடையிற் சார்ந்தாராக; உள்ளிருந்த திங்களூர் மறைத் தலைவர் - மனையினுள்ளே சென்று தங்கியிருந்த திங்களூர் வேதியர் தலைவராகிய அப்பூதியார்; செழுங்கடையில்...எனக் கேட்டு - செழிப்புடைய தமது மனை முன் கடையில் நம் சிவபெருமானின் அடியவர் ஒருவர் வந்த அணைந்தனர் என்று சொல்லக் கேட்டு; நண்ணினார் - மனையின் உள்ளிருந்து முன் கடையில் வந்து சேர்ந்தனர்.

(வி-ரை.) அங்கு - அங்கு நின்றும்; தண்ணீர்ப் பந்தரினின்றும்; ஐந்தனுருபு தொக்கது. முனிவரும் - முனிவர் - திருநாவுக்கரசர். "ஞானத் தவமுனிவர்" (1266) பார்க்க. இவ்வாறு தமது பெயரின் விளக்கத்தாற் போந்த புகழ்ச்சியின் விருப்பத்தாற் போந்தனர் என்று மக்கள் எண்ணி அவசரபட்டு விடாதபடி அற்றன்று; இவர் உலக நிலை எல்லாம் முனிந்த பெரு முனிவர்; ஆதலின் அவர் சென்ற கருத்து வேறு; திருவருளும் அன்பின்றிறமும் வெளிப்படும்படி அருள் கூட்டச் சென்றனர் என்பார் முனிவரும் என்றார். யம்மையும் இச்சிறப்புக் குறித்தது. பின்னர் அப்பூதியார் முனிந்து சில கூறுதற் கிடமாக நிற்பவர் (1795 - 1797) என்றதும் குறிப்பு.

கடைத்தலை - முன்றில். இவரது கடை - கால்; அவரது தலை - முன் சார்வாக; திருவடி அவரது தலைமுன் சார்வாக அமைய என்ற குறிப்பும் காண்க

முன் சார்வு ஆக - கடைத்தலையின் முன்பு சார; முன்னரே சார்வாகக் கொண்ட நிலை இப்போது வெளிப்படக் கைகூடி உளதாக. ஆக - ஆக்கம் தருவதாக - என்பதும் தொனி.

உள்ளிருந்த - மறைத் தலைவர் - கேட்டு - நண்ணினார் - அப்போதுதான் மனைக்குட் சென்றமர்ந்த வேதியர் வெளியில் வந்தனர். இதுவரை உலகறியவாராது உள்ளே ஒடுங்கியிருந்து அவரது பெருமை; இப்போது வெளிப்பட நண்ணலாயிற்று என்ற குறிப்பும் காண்க. கேட்டு - கேட்டலுமே; தாம் அப்போதுதான் மனையிற் போந்தனராயினும் வந்த காரியத்தையும் அயர்வையும் பாராது அடியவர் ஒருவர் வந்தார் எனக் கேட்டவுடன் வெளிப்போந்தமை அவரது அடியார்க்கடியாராந் தன்மையின் உறைப்பினைக் காட்டுவதாம்.

செழுங்கடை......என - அடியார்கள் போதருமிடமாதலின் செழுங்கடை என்றார். பிரான்தமர் - அடியவர் : "எம்பிரான் றமரேயோ" (318) : பெருமானால் தம்மவராக ஆட்கொண்டருளப் பெற்றவர். ஒருவர் - ஒப்பற்றவர் என்ற குறிப்புமாம்.

எனக்கேட்டு - அடிகளைச் சூழ இருந்தவர்களும் அன்பின்நிறத்தால் மேம்பட்டார்களாதலின் முனிவர் சார்ந்த செய்தியை உடனே அறிவிக்க அது கேட்டு என்க.

நண்ணினார் - வெளியே மனைக்கடையில் வந்தனர்.

9