(இ-ள்.) திருமறையோர் அது மொழிய - திருவுடைய வேதியராகிய அப்பூதியார் அவ்வாறு சொல்லக் கேட்டு; திருநாவுக்கரசர்...உரை செய்வார் - அவர் பெருமையினை அறிந்து திருநாவுக்ரசர் விடை சொல்வாராகி; "பிறதுறையினின்று ஏற...யான்" என்றார் - "புறச்சமயத்துறையினின்று ஏறும் பொருட்டு அருளிச் செய்து பெருஞ்சூலை நோய் தந்து இறைவர் ஆட்கொள்ள அடைந்து உய்தி பெற்ற தெருட்சி கொண்ட வுணர்வில்லாத சிறுமையிளை உடையேன் நான்" என்று சொன்னார். (வி-ரை.) திருமறையோர் - "நின்ற மறையோர்" (1795) என்றதனையே தொடர்ந்து கூறியது காண்க. அது - நீர் கூறியது வெம்மை மொழி; நீர் யாவர்? என்றெல்லாம் கூறிய அவை. அது - அவ்வாறு என்ற பொருளில் வந்தது. பெருமை - அன்பின் பெருமை தம்மைப் பெருமைபடக் கூறியதனாலன்று; இறைவரது திருத்தொண்டில் ஈடுபட்ட பெருமையினையே கருதியபடி. அறிந்து - கண்ட வெகுட்சியாகிய மெய்ப்பாட்டினின்றும், கேட்ட மொழிகளினின்றும் உள்ளிருந்த அன்பின் பெருமை அறியவந்தது என்பது. உரை செய்வார் - அவர் கேட்ட வினாவுக்கு விடை சொல்வாராகி. உரை - விடை. உரை செய்வாராகிய; முற்றெச்சம். உரை செய்வார் - என்றார் என முடிக்க. பிறதுறை - "பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறையில் சமணீசர் புறத்துறையா, மவ்வாழ்குழி" (1338) என்ற புறச்சமயக் குழி. எல்லாச் சமயங்களும் அவ்வநிலைக்கேற்ற படித்துறைகளாக அமைந்தொழிவன ஆதலின் அதனையும் துறை என்றார். துறையினின்றேற - என்றதனால் அது கடைபோக ஈடேற்றிச் செலுத்தும் துறையன்று என்பது. நின்று - நிற்கவைத்ததும் அருளேயாம் என்பது. ஏற அருளும் - ஏறும் பொருட்டுக் கொடுத்து அருளும்; பெருஞ்சூலை - அருளின் உருவம் என்றபடி. "வாழ்வு பெறத் தரு சூலை" (1338) என்று போற்றியது காண்க. நோய் - நல்குரவு முதலிய துன்பங்கள் யாவையும் இறைவர் உயிர்களைத் தூய்மையாக்கி ஈடேற்றுதற்குச் செய்யும் அருளின் வண்ணங்களே என்று கொள்வது அறிவுடையோர் இயல்பு. ஆட்கொள்ள அடைந்து - அவன் அருளி ஆட்கொண்டதனால் வந்து அடைந்து. அடைந்துய்ந்த - சிறுமையேன், உணர்வில்லாத சிறுமையேன் என்று தனித்தனி இயைக்க. தெருளும் உணர்வில்லாத சிறுமை என்றது சைவத்திற் பிறந்தும் அதன் பெருமையை உணரமாட்டாது, சமயங்களின் நன்மை தீமைகளையும் உணரமாட்டாது, புறச்சமயம் புக்குச் சிவனை இகழ்ந்த சிறுமை. ஏழைத்திருத்தாண்டகமும், திருவாரூர்த் திருவிருத்தமும், பிறவும் பார்க்க. சிறுமையேன் யான் - அப்பூதியார் "அவர் பெருமை" (1897) என்று தமது தன்மையைப் பெருமையாகப் போற்றினும், தம்மைத்தாம் உணர்வில்லாத சிறுமையாராகவே உணர்ந்து ஒழுகினர் அப்பர் பெருமான்; இது அவர் பெருமை. அப்பூதியார் தமது பெருமையைக் கண்ட விடத்தில் தமது சிறுமையினையே கண்டனர் நாயனார். இது அவர் திருவாக்கிற் பலவிடத்தும் காணலாம். சிறுமையைப் பெருமையாகக் கொண்டது அப்பூதியாரது பெருமையாமென்று நாயனார் கொண்டனர். "அவர் பெருமை அறிந்து" என்றது இக்கருத்து. |