பக்கம் எண் :

262திருவரங்கக்கலம்பகம்

ஸ்ரீ

திருவரங்கக்கலம்பகம்

சிறப்புப்பாயிரம்.

ஆழ்வார்முன் பின்னவர்க்கு மாமறைதந் தார்தமிழால்
வாழ்வார் மணவாளர் மாண்பவருட் - டாழ்வாரு
மெம்போ லியர்க்கு மிரங்கியரங் கக்கலம்ப
கம்போத நல்கவைத்தார் காண்.

(இதன் பொருள்.) முன் - முற்காலத்தில், ஆழ்வார் - நம்மாழ்வார், - பின்னவர்க்கு - பிற்காலத்திலுள்ளார்க்கு, (போதம் நல்க) - நல்லறிவைக் கொடுக்குமாறு, (இரங்கி) - திருவுளமிரங்கி, மா மறை - சிறந்த (வடமொழி) வேதத்தை, தமிழால் - தமிழ்ப்பாஷையினால், தந்தார் - திருவாய்மலர்ந் தருளினார்; (பின்) - பிற்காலத்தில், மாண்பவருள் - மாட்சிமையையுடைய வர்களுள், வாழ்வார் - வாழ்பவராகிய, மணவாளர் - அழகிய மணவாள தாசர், தாழ்வு ஆரும் - கீழ்மைபொருந்திய, எம்போலியர்க்கும் - எம்மைப் போன்றவர்களுக்கும், போதம் நல்க -, இரங்கி -, அரங்கக்கலம்பகம் - திருவரங்கக்கலம்பக மென்னுந் திவ்வியப் பிரபந்தத்தை, (தமிழால்) -, வைத்தார் - பாடி வைத்தார்; (என்றவாறு.)

ஆழ்வார் - பகவானுடைய மங்களகுணங்களாகிய அமுதவெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவர்; இது, இங்கே, அல்லாத ஆழ்வார்களிற்காட்டிலுஞ் சிறந்து அவர்களுக்கு அவயவியாகிய நம்மாழ்வாரை உணர்த்திற்று. "பின்னவர்" என்றது - ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீஆள வந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் தொடக்கமான ஆசாரியர்களை - (ஓதலாகாதென்று சிலர்க்கு) மறுக்கப்படுதல்பற்றி, மறை யென்று பெயர்; மறு - பகுதி, ஐ - செயப்படுபொருள் விகுதி. இனி - இச்சொல்லுக்கு - (எளிதிலுணரலாகாத படி) மறைந்துள்ள பொருள்களையுடைய தென்று காரணப்பொருள் கூறவுமாம். யாகம் முதலிய கிரியைகளைக் குறிக்கிற கர்மகாண்டத்தையும் பகவானைக் குறிக்கிற பிரமகாண்டத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டிருத்தல் பற்றி, இதற்கு "மா" என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது. நான்கு வேதங்களையும் முறையே திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதிருவந்தாதி என்னும் நான்கு திவ்வியப்பிரபந்தங்களாக ஸ்திரீசூத்திரருமுட்பட அனைவர்க்கும் அதிகரிக்கலாம்படி தமிழால் அருளிச்செய்கையால், "மறைதந்தார் தமிழால்" என்றார்.

முற்காலத்தில் ஆழ்வார் தாழ்வுயாதுமில்குரவராகிய ஸ்ரீமந்நாதமுனி கள் தொடக்கமானார்க்கு ஏற்ப வடமொழி மறைப்பொருளையே தமிழால்