பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்963

 

திருச்சிற்றம்பலம்

25. அப்பூதியடிகணாயனார் புராணம்

தொகை

"ஒருநம்பி யப்பூதி யடியார்க்கு மடியேன்"

-திருத்தொண்டத் தொகை

வகை

"தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா
 மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே
 யினமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரான்
 அனமார் வயற்றிங்க ளூரினில் வேதிய னப்பூதியே"

- திருத்தொண்டர் திருவந்தாதி

விரி

1783.

தாண்டவம் புரிய வல்ல தம்பிரா னாருக் கன்பர்
ஈண்டிய புகழின் பாலா; ரெல்லையி றவத்தின் மிக்கார்;
ஆண்டசீ ரரசின் பத மடைந்தவ ரறியா முன்னே
காண்டகு காதல் கூரக் கலந்த வன்பினரா யுள்ளார்.

1

புராணம்:- அப்பூதியடிகள் என்னும் பெயருடைய நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி நிறுத்த முறையானே, திருநின்ற சருக்கத்துள் ஐந்தாவது அப்பூதியடிகணாயனாரது சரிதங் கூறத் தொடங்குகின்றார்.

தொகை:- ஒரு நம்பியாகிய அப்பூதியடிகளுடைய அடியார்களுக்கும் நான் அடியேன்.

அடியார்க்கும் என்ற உம்மை முன்கூறிய பெரியார்களுடன் இவர்களுக்கும் என்றும், அப்பூதியாருக்கேயன்றி அவரது அடியார்க்கும் என்றும், கொள்ள நின்றமையின் இறந்தது தழுவிய எச்சவும்மை. ஒரு ஒப்பற்ற. நம்பி - நன்மையுடைமையும் தீமையிலாமையும் சார்ந்த ஆடவருட் சிறந்தவர். 1783, 1784 பார்க்க. இக்காரணம்பற்றியே மணமகனை நம்பி என்று வழங்கியது முன்னாள் தமிழ் வழக்கு. "திலத நுதலுமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும்" (சேந் - திருவிசைப் - 5); "நங்கையவ டனைநயந்த நம்பி யோடு" (திருஞான - புரா - 483); திருநாவுக்கரசு நாயனாரின் திருவடிகளே உறுதியாவன என்ற ஒரு நம்பிக்கையினை மேற்கொண்டவர் என்ற சரிதக் குறிப்பும்பட நின்றது. அப்பூதி -நாயனாரது பெயர்.

வகை:- அழியாப் பெருஞ்செல்வமாவது திருநாவுக்கரசு நாயனாருடைய இனிய திருவடிகளே என்று மனமார்ந்த தண்ணீர்ப்பந்தல் முதலிய அறங்களை அத்திருவடிகளை வாழ்த்தி அப்பெயராற் செய்துவைத்து, அதனாலே அவரது வளப்பமிக்க தமிழாகிய தேவாரத் திருவாக்கினில் தமது பெயரை வைக்கப் பெற்றவர்; எங்கள் தலைவர்; அன்னங்கள் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திங்களூரில் அவதரித்த அந்தணராகிய அப்பூதியடிகள்.

தனம் - ஏனைச் செல்வங்களெல்லாம் பெற்றதன் பயனாகிய பெருஞ்செல்வம். "பெற்றநீடு பயன் கொள்வார்" (441); "வளத்தினால் வரும்பயன் கொள்வார்"