பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்113

விளையாட்டு அரங்கங்களில் கூடாரங்கள்

விளையாட்டு அரங்கங்களில் கூடாரங்கள்
இயந்திரத் துப்பாக்கிகளுடன்
ராணுவ வீரர்கள்
தெருவில்
ஒழுங்கு அமைதி இப்போது நமக்குத் தேவை
ஒரு குறிப்பு
தகவல் தொடர்பு அமைச்சர்கள்
கூட்டத்தில் அறிவிப்பு
இன்னும் எழுபது சதவீத மக்களை
தொலைக்காட்சியும் வானொலியும்
அடைய வேண்டும்

             எந்தச்செய்திகளுக்காக

பசும்புதர்களிடையே நிழல்கள்
நடமாட்டங்கள் வலுக்கின்றன
இவைகளெல்லாம்
ஓசையின்றி அமுக்கப்படும்
தீப்பற்றி எரியும் கிராமங்களுடன்
உயிர்த் தொடர்பு துண்டிக்கப்படுகிறது
கலவரமும் பீதியும்
நாடித் துடிப்புக்களை முறுக்கேற்றுகின்றன
வெகு தொலைவில் இல்லை
கிராமங்கள் மற்றும் நகரங்கள்
முரண்பாடுகள் முற்ற முற்ற
ஒத்த கருத்துக்கள் இணைகின்றன
சமூகம் முகமூடி ஒன்றை அணிந்துகொள்கிறது
தீக்காயங்கள் பட்டவர்களின் முகங்கள்
வேற்றுமையின்றி ஒன்றாயிருக்கின்றன
புதிய புதிய முகங்கள்
ஒன்றன் பின் ஒன்றாய்
வெளிக் கிளம்புகின்றன
புகை மூட்டத்தின் இடையே
செய்திகள் வாசிக்கப்படுகின்றன
ஒழுங்கு அமைதி இப்போது நமக்குத் தேவை
விளையாட்டு அரங்கங்களில் கூடாரங்கள்