பக்கம் எண் :

180ஆத்மாநாம் படைப்புகள்

விடியலில் ஒரு கவிதை

அந்த மாபெரும்
பனிக்கட்டியின்
ஒரு முனையை
உடைத்தாகிவிட்டது
நண்பர்காள் நாம் அதனை
முழுவதும் உடைக்க வேண்டும்
உலகத்தின்
மிக உயர்ந்த புள்ளி
எவரெஸ்டில் இருப்பினும்
நமக்குத் தேவையான அளவு
சமவெளியை
நாம்தானே உருவாக்க வேண்டும்
நமக்குள் எதற்கு
உருகிக்கொண்டிருந்தும்
திடமாய் உள்ள பனிக்கட்டி
அதன் இரு முனையில்
நாம் இருந்தாலும்
நம் உருவம் நிழலாய்
ஏன் இருக்க வேண்டும்
ஒரு முனையை நான் உடைக்க
மறுமுனையை நீங்கள் உடையுங்கள்
சமவெளியில்
உறுதியாய்க் கைகுலுக்கி
உட்பரிமாற்றம் துவக்குவோம்
அமைதிப்பறவை
சிறகடித்துப் பறக்கட்டும்
நம் பார்வை
நேருக்கு நேர் சந்தித்து
மகிழ்ச்சி பரவட்டும்
சொல்லத் தகுமோ
இதுதான் வாழ்க்கை என