பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்217

குரு

மாதா பிதா குரு தெய்வம் என்பதைச் சின்ன வயதிலேயே கேட்டிருந்த எனக்கு எந்தப் பொருளும் சரியாக விளங்காமலே அதனை நம்பி வந்தேன். அதில் பாதி உண்மை என்பது ஓரளவுக்குப் புலனாயிற்று. ஆனால் சிறிது காலத்தில் மற்ற பாதியில் என் கவனம் செல்ல ஆரம்பித்தது. குரு என்றால் பள்ளிக்கூட ஆசிரியர் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. மொழி, சரித்திரம், கணிதம், விஞ்ஞனம், சமூகவியல் போன்றவற்றை மனப்பாடம் செய்தோ பழக்கத்தினாலோ ஒப்பிப்பவரை என்னால் குருவாகக் கண்டுகொள்ள இயலவில்லை. நான்கில் ஒரு பங்கிற்கு மேல் என் வாழ்நாளின் காலகட்டத்தில் வெளிப்படையாகக் குருவைக் காண இயலாத நான் ஏதோ ஒரு விதத்தில் என்னுடன் குரு தொடர்ந்துவருவதாக உணர்ந்தேன். சாதாரண மனிதன் ஒருவனாகச் சமூக ஒட்டத்தில் இழுத்துச் செல்லப்படும் பொழுது ஒரு சிலர் குருவைப் போன்ற பிரமையை அளித்துள்ளார்கள்.

மதம், அரசியல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெகு சுலபத்தில்குரு கிடைக்கிறார்.

இத்தகைய தற்காலிக மயக்கத்தில் இருந்த வெகு சீக்கிரம் வெளிவந்த பிறகும்கூட என் உள்ளுணர்வோடு குரு தொடர்ந்து வந்தார்.

விஞ்ஞானம், படைப்புத்துறையைச் சார்ந்த ஓவியம், இசை, சிற்பம், இலக்கியம் போன்றவற்றில் அதீத சாதனை புரிந்துள்ளவர்களுக்குள் குருவின் குரல் இழைந்து வருவதைக் கவனிக்க முடிந்தது. ஆயினும் புதிதாகப் படைத்த எவருமே தாங்கள் படைத்த எதிலும் குருவின் பற்றுக் கோடுகள் இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. இது முற்றிலும்உண்மையே ஆயினும் குரு ஒவ்வொரு படைப்பில் ஒவ்வொரு விதமாகத் தோன்றத் தொடங்கினார்.

உண்மையான குரு எதற்குமே கோபித்துக்கொள்ளாதவராதலால் எல்லாப் படைப்புக்களிலும் அவரால் இருக்க முடிந்தது. ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு முறைபடைக்கும் பொழுதும் புதிய படைப்பாளியாகிப் புதிய குருவாகிறான். ஒவ்வொரு புதிய குருவையும் மறுத்துக்கொண்டே படைப்பாளி பிறந்தவண்ணமிருக்கிறான்.

எந்த ஒரு கட்டுபாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காணமுடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்