9. புறநானூறு நூல் வரலாறு புறப்பொருளைப்பற்றிப் புகலும் நானூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு. கண்ணால் பார்த்தறியும்படி, வாயினால் கூறும்படி வெளிப்படையாக நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாம் புறப்பொருள், அரசியல், வாணிகம், வரலாறுகள், அறவுரைகள், போர் நிகழ்ச்சிகள், சமுதாயப் பழக்கவழக்கங்கள் ஆகிய பலவற்றைப்பற்றி உரைப்பனவெல்லாம் புறப்பொருள். புறநானூற்றிலே கடவுள் வாழ்த்தைச் சேர்த்து 398 பாடல்கள் இருக்கின்றன. கடவுள் வாழ்த்துப்பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. அகநானூற்றிலே கடவுள் வாழ்த்தைச் சேர்க்காமல் நானூறு பாடல்கள்; நற்றிணையிலே கடவுள் வாழ்த்தைக் கழித்து நானூறு பாடல்கள்; குறுந்தொகையிலேயும் கடவுள் வாழ்த்தைக் கழித்து நானூறு பாடல்கள்; ஐங்குறு நூற்றிலே கடவுள் வாழ்த்தை நீக்கி ஐந்நூறு பாடல்கள்; ஆதலால் புறநானூற்றிலும் கடவுள் வாழ்த்தைக் கழித்து நானூறு பாடல்கள் இருந்திருக்கவேண்டும்; கடவுள் வாழ்த்தைக் கழித்தால் புறநானூற்றில் இப்பொழுதுள்ள பாடல்கள் 397 தான். ஒரு பாடல் மறைந்துவிட்டது; 267, 268 ஆகிய இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்துடன் புறநானூற்றிலே இப்பொழுதுள்ள 398 பாடல்களிலே 45 பாடல்கள் சிதைந்திருக்கின்றன. இவைகளிற் சில பாடல்களிலே சிலவரிகள் இல்லை; சில |