தனியே பிரிந்தபோது இரண்டுக்கும் இடையே சிக்கியிருந்த அந்தத் தீக்குச்சி கீழே விழுந்தது. “கடவுளே உதவி செய் !” என்று வேண்டியபடி கீழே விழுந்த தீக்குச்சியைப் பார்த்தான். அதன் ஒரு முனை சிவப்பு நிறத்தில் இருந்தது. உடனே சேரன் அதை ஆவலோடு எடுத்துக் கொண்டான். தீக்குச்சி கிடைத்துவிட்டது. அவன் அறிவு தெரிவித்த படி அறைக்குள்ளே தீயை உண்டாக்க வேண்டும். சேரன் உடனே நாற்காலியைப் போட்டு அதன் மீது ஏறி, சன்னல் திரைகளையும், கதவின் பெரிய திரையையும் கழற்றினான். அறையின் நடுவே கதவின் பெரிய திரையை ஒரு கூம்பு போல இருக்குமாறு வைத்தான். தீப்பெட்டியையும் தீக்குச்சியையும் எடுத்துக் கொண்டான். ஒரே ஒரு தீக்குச்சியால் துணியைக் கொளுத்த வேண்டும். முடியுமா? கொளுத்துவதற்கு முன் தீக்குச்சி அணைந்துவிட்டால்? சேரன் மீண்டும் சிந்தித்தான். அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டான். காலண்டரில் இருந்த திருமுருகன் குறுநகையோடு, ‘அஞ்சாதே’ என்று அபயகரம் காட்டிக்கொண்டிருந்தான். உடனே அவன் அறிவு மின்னலாய் வேலை செய்தது. “முருகா, நீ இருக்கும் போது நான் அஞ்ச மாட்டேன்” என்று கூறிக்கொண்டே எழுந்து காலண்டர் அருகே சென்றான், சேரன். நவம்பர் 13 காட்டிய காலண்டரை, ஒரு நிமிடத்தில் டிசம்பர் 10 காட்டச் செய்தான். அவன் கிழித்த மெல்லிய தேதித் தாள்களை, கூம்பாக நின்ற திரையின் அருகே குவித்தான். பிறகு தீப்பெட்டியையும் தீக்குச்சியையும் எடுத்துக் கொண்டான். |