பக்கம் எண் :

  

சிரிக்கச் சிரிக்க...


சின்ன குழந்தைக்கும்கூட மிகுந்த சுவையான கதைகளைச் சொல்லிச் சிரிக்க வைத்து விடுவார் பாவேந்தர்.

குழந்தையோடு குழந்தையாகிவிடும் உளப்பாங்கு அவருக்கு உண்டு.

துடுக்குத்தனம் செய்யும் குழந்தையை மெச்சிப் பேசுவார். சுட்டியான பிள்ளையைத் தட்டிக் கொடுப்பார்.

மக்கு-உம்மென்று இருக்கும் குழந்தையை அவருக்குப் பிடிக்காது.

சீற்றம் வந்து விட்டால், தொப்பென்று தம் நிலையினின்று நேர்மாறான போக்கில் சென்றுவிடுவார்.

புரட்சிப் பாக்கள் இயற்றுவதிலும், கனிச்சுவைக் கவிதைகள் எழுதுவதிலும் பேராற்றல் படைத்திருந்த நம் கவிஞர், உரைநடையில் தமக்கெனப் புதுவழி ஒன்றினை நாட்டியவர்.

சிறுசிறு சொற்றொடர்கள், சில நேரங்களில் முற்றுப் பெறாதனபோல் தோன்றும் புதிய உத்திகள்.

ஆனாலும்-

தமது ஆழமான சிந்தனையை-சமுதாயத்துக்குத் தாம் சொல்லிக் காட்ட விழையும் கருத்தை-மிக அருமையாகச் சொல்லி விடுவார். நளினமாகக் கூறவேண்டுமே என்ற சுற்றுவழி பாவேந்தருக்கு ஒத்து வராது. நறுக்குத் தெறித்தாற்போல் எதையும் சொல்லவேண்டும். இதுதான் உரைநடை உத்தி அவருக்கு!