பக்கம் எண் :

சோழமண்டல சதகம்61

என்று கொங்குநாட்டுப் பழைய கோட்டை மரபினரை ஒரு பாடல் புகழும்.

களந்தைக்குத் தெற்கில் குடிதாங்கிச்சேரி என்ற ஊர் உள்ளது. இவனைக் களந்தைக் குடிதாங்கி என்றும் அழைப்பர்.

வெறும்புற் கையும்அரி தாம்பிள்ளை சோறும்என் வீட்டில்வரும்
எறும்புக்கும் ஆற்பதம் இல்லைமுன் னாள்என்னி ரும்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கி யைச்சென்று கூடியபின்
தெறும்புற்கொள் யானை கவளம்கொள் ளாமல் தெவிட்டியதே

என்பது தனிப்பாடல் (தமிழ் நாவலர் சரிதை 191). முதலில் பாதிப் பாடலைப் பாடிப் பரிசில் பெற்றபின் பிற்பாதியைப் பாடியது என்பர்.

பெரியபுராண அரங்கேற்றம்

குலத்தில் பெரியோர் பேர்படைத்த
          குணத்தில் பெரியோர் கொடைப்பெரியோர்
தலத்தில் பெரிய அநபாயன்
          தழைத்த சமூகம் தனில்ஏறிப்
பலத்தில் பெறுபஞ் சாக்கரநீள்
          படியில் பெரிய புராணத்தை
வலத்தில் குலவ அரங்கேற்றி
          வைத்தார் சோழ மண்டலமே
86

குலத்தில் பெரியோர்களும், புகழ்பெற்ற குணத்தில் பெரியோர்களும், கொடையில் பெரியோர்களும் ஒன்றாகக் கூடிப் பெரியபுராணத்திற்குச் செய்ய வேண்டிய மரியாதைகளையெல்லாம் செய்து யானை மீதேற்றி வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து அநபாய சோழன் முன்னிலையில் தில்லைப் பொன்னம்பலத்தில் பஞ்சாக்கரப் படியில் வைத்து அரங்கேற்றம் செய்வித்தனர்.

திருஞானசம்பந்தரின் திருநாளான சித்திரை ஆதிரையில் 4-4-1139 அன்று தொடங்கிய பெரியபுராண அரங்கேற்றம் 22-4-1140 அன்று நிறைவெய்தியதாகக் கல்வெட்டறிஞர் குடந்தை என்.சேதுராமன் அவர்கள் கருதுகிறார்.