29. சுடரோடு இரத்தல்  
 
ஈன்ற என் உளமும், தோன்றும் மொழி பயின்ற  
வளை வாய்க் கிள்ளையும், வரிப் புனை பந்தும்,  
பூவையும், கோங்கின் பொன் மலர் சூட்டிய  
பாவையும், மானும்--தெருள்பவர் ஊரும்,  
நெடுந் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினைப்
5
பெரு வளி மலக்க, செயல் மறுமறந்தாங்கு--  
சேர மறுக, முதுக்குறை உறுத்தி,  
எரி தெறும் கொடுஞ் சுரத்து இறந்தனளாக,  
(நதி மதம், தறுகண், புகர், கொலை, மறுத்த  
கல் இபம்-அதனைக் கரும்பு கொள வைத்த
10
ஆலவாய் அமர்ந்த நீலம் நிறை கண்டன்,  
மறிதிரைப் பரவைப் புடை வயிறு குழம்பத்  
துலக்கு மலை ஒரு நாள் கலக்குவ போல,  
உழுவை உகிர் உழக்கும் ஏந்து கோட்டு உம்பல்,  
உரிவை மூடி ஒளியினை மறைத்து,
15
தரை படு மறுக்கம் தடைந்தன போல)  
விண் உற விரித்த கரு முகிற்படாம் கொடு,  
மண்ணகம் உருகக் கனற்றும் அழல் மேனியை--  
எடுத்து மூடி, எறிதிரைப் பழனத்துப்  
பனிச் சிறுமை கொள்ளா முள் அரை முளரி
20
வண்டொடு மலர்ந்த வண்ணம் போல,  
கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி--  
மலர்தலை உலகத்து இருள் எறி விளக்கும்,  
மன் உயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்,  
மறை உகு நீர்க்குக் கருவும், கரியும்,
25
வடிவம் எட்டனுள் வந்த ஒன்றும்,  
சேண் குளம் மலர்ந்த செந்தாமரையும்,  
சோற்றுக் கடன் கழிக்கப் போற்று உயிர் அழிக்கும்  
ஆசைச் செருநர்க்கு அடைந்து செல் வழியும்,  
அருளும் பொருளும், ஆகித்
30
திரு உலகு அளிக்கும் பருதி வானவனே!  
உரை