53. உள் மகிழ்ந்து உரைத்தல்
 
 
நுனிக் கவின் நிறைந்த திருப் பெரு வடிவினள்!  
உயிர் வைத்து உடலம் உழன்றன போல,  
நெடும் பொருள் ஈட்ட, நிற்பிரிந்து இறந்து,  
கொன்று உணல் அஞ்சாக் குறியினர் போகும்  
கடுஞ் சுரம் தந்த கல் அழல் வெப்பம்--
5
தேவர் மருந்தும், தென் தமிழ்ச் சுவையும்,  
என் உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி,  
குருவியும், குன்றும், குரும்பையும், வெறுத்த நின்  
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடாமுன்--  
(வீழ் சுற்று ஒழுக்கிய பராரைத் திரு வடக்
10
குளிர் நிழல் இருந்து, குணச் செயல் மூன்றும்,  
உடலொடு படரும் நிலை நிழல்போல  
நீங்காப் பவத்தொகை நிகழ் முதல் நான்கும்,  
உடன் நிறைந்து ஒழியா உட்பகை ஐந்தும்,  
மதியினின் பழித்த வடு இரு மூன்றும்,
15
அணுகாது அகற்றி, பணிமுனி நால்வர்க்கு  
அறம் முதல் நான்கும் பெற அருள் செய்த  
கூடற் பெருமான் நீடு அருள் மூழ்கி,  
இரு பதம் உள் வைத்திருந்தவர் வினைபோல்)  
போயின துணைவினை நோக்கி
20
ஏகின எனக்கே அற்புதம் தருமே!  
உரை