58. வழிபாடு கூறல்
 
   
நிரை இதழ் திறந்து மது வண்டு அருத்தும்  
விருந்து கொள் மலரும் புரிந்து உறை மணமும்,  
செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும்,  
பாலும் சுவையும், பழமும் இரதமும்,  
உடலும் உயிரும், ஒன்றியது என்ன--
5
கண்டும், தெளிந்தும், கலந்த உள் உணர்வால்,  
பாலும், அமுதமும், தேனும், பிலிற்றிய  
இன்பு அமர் சொல்லி, நண்பும், மனக் குறியும்,  
வாய்மையும், சிறப்பும், நிழல் எனக் கடவார்--  
விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும்,
10
அளகைக்கு இறையும் அரும் பொருள் ஈட்டமும்,  
கண்ணனும் காவலும், முனியும் பசுவும்,  
ஒன்றினும் தவறா ஒருங்கு இயைந்தனபோல்,  
நீடி நின்று உதவும் கற்புடை நிலையினர்  
தவம் கற்று ஈன்ற நெடுங் கற்பு அன்னை!
15
(முன் ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர்,  
பன்றியும், பறவையும், நின்று உரு எடுத்து,  
கவையா உளத்துக் காணும் கழலும்,  
கல்வியில், அறிவில், காணும் முடியும்,  
அளவு சென்று எட்டா அளவினர் ஆகி,
20
மண்ணும் உம்பரும், அகழ்ந்தும் பறந்தும்,  
அளவா நோன்மையில் நெடு நாள் வருந்திக்  
கண்ணினில் காணாது, உளத்தினில் புணராது,  
நின்றன கண்டு, நெடும் பயன் படைத்த  
திரு அஞ்செழுத்தும் குறையாது இரட்ட,
25
இரு நிலம் உருவிய ஒரு தழல்-தூணத்து,  
எரி, மழு, நவ்வி, தமருகம், அமைத்த  
நாற் கரம், நுதல்விழி, தீப் புகை கடுக் களம்,  
உலகு பெற்று எடுத்த ஒரு தனிச் செல்வி,  
கட்டிய வேணி, மட்டு அலர் கடுக்கை,
30
ஆயிரம் திருமுகத்து அருள் நதி, சிறுமதி,  
பகை தவிர் பாம்பும், நகை பெறும் எருக்கமும்,  
ஒன்றிய திருஉரு நின்று நனிகாட்டிப்  
பேர் அருள் கொடுத்த) கூடல் அம் பதியோன்  
பதம் இரண்டு அமைத்த உள்ளக்
35
கதி இரண்டு ஆய ஓர் அன்பினரே.
உரை