71. மாலைப் பொழுதொடு புலம்பல்
 
   
ஆயிரம் பணாடவி அரவு வாய் அணைத்துக்  
கரு முகில் நிறத்த கண்ணனின் சிறந்து,  
நிறை உடல் அடங்கத் திரு விழி நிறைத்துத்  
தேவர் நின்று இசைக்கும் தேவனின் பெருகி,  
குரு வளர் மரகதப் பறைத் தழை பரப்பி
5
மணி திரை உகைக்கும் கடலினின் கவினி,  
முள் எயிற்று அரவம் முறித்து உயிர் பருகிப்  
புள் எழு வானத்து அசனியின் பொலிந்து,  
பூதம் ஐந்து உடையும் காலக் கடையினும்  
உடல் தழை நிலைத்த மறம் மிகு மயிலோன்;
10
புரந்தரன் புதல்வி, எயினர்தம் பாவை,  
இரு பால் இலங்க, உலகு பெற நிறைந்த  
அருவிஅம் குன்றத்து அணி அணி கூடற்கு  
இறையவன், பிறையவன், கறை கெழு மிடற்றோன்,  
மலர்க் கழல் வழுத்தும் நம் காதலர், பாசறை
15
முனைப்பது நோக்கி, என் முனை அவிழ் அற்றத்து--  
பெரும் பகலிடையே, பொதும்பரில் பிரிந்த  
வளை கட் கூர் உகிர்க் கூக்குரல் மோத்தையை  
கருங் கட் கொடியினம் கண் அறச் சூழ்ந்து,  
புகை உடல் புடைத்த விடன் வினைபோல--
20
மனம் கடந்து ஏறா மதில் வளைத்து, எங்கும்  
கரு நெருப்பு எடுத்த மறன் மருள் மாலை!  
நின் வரற்கு ஏவர் நல்கினர்? நின் வரல்  
கண்டு உடல் இடைந்தோர்க் காட்டுதும்; காண்மதி:  
மண் உடல் பசந்து கறுத்தது; விண்ணமும்
25
ஆற்றாது அழன்று, காற்றின் முகம் மயங்கி,  
உடு எனக் கொப்புள் உடல் நிறை பொடித்தன;  
ஈங்கு இவற்று அடங்கிய இரு திணை உயிர்களும்  
தம்முடன் மயங்கின; ஒடுங்கின; உறங்கின;  
அடங்கின; அவிந்தன; அயர்ந்தன; கிடந்தன;
30
எனப் பெறின்--மாலை! என் உயிர் உளைப்பதும்,  
அவர் திறம் நிற்பதும், ஒருபுடை கிடக்க;  
உள்ளது மொழிமோ, நீயே: விண்ணுழை  
வந்தனை என்னில், வரும் குறி கண்டிலன்;  
மண்ணிடை எனினே, அவ் வழியான;
35
கூடி நின்றனை எனின், குறி தவறாவால்;  
தேம் படர்ந்தனை எனின், திசை குறிக்குநரால்;  
ஆதலின், நின் வரவு எனக்கே  
ஓதல் வேண்டும் புலன் பெறக் குறித்தே.
உரை