பக்கம் எண் :

62

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

பற்றுக்கே டாகா தொழியவே, என் சிந்தை தன் இயல்பின்படி நிலையற்றுச்      சுழன்று துன்புற்றது.  அச் சமயம் நீ நின் திருவடிகளை எனக்குப் பற்றுக்கோடாக அருளி என் மனத்துன்பத்தை யொழித்தாய் என்பார் ‘சிந்தை அவலங்கெடுத்து’ என்றார்.  ‘விழியும் கொடுத்த’ என்பதில் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை; ‘விழிகொடுத்தும்’ எனக்கொண்டு ‘அருளிய’ என்பதை இசையெச்சமாகக் கொள்க:  அவலங் கெடுத்தருளியதேயன்றி விழி கொடுத்துமருளிய என்பது பொருளாம்.  

(53)

54. முத்திக்கு வித்து;(உ)ன் அடியார்கள் சிந்தை
முளரிக்க ருக்கன்; மொழியெண்
    சித்திக்கு மூலம்; தவயோகி கட்குத்
        தெளிகன்னல் ஊறும் அமிர்தம்;
    பத்திக்கு நித்தம் அருள்வீசு கொண்டல்:
        களவீசன் எங்கள் பரமன்
    அத்திக்கு முன்னம் வரமேய ளித்த
கருவேசன் அம்பொன் அடியே.

    திருக்களா நிழலில் எழுந்தருளிய இறைவனும் எங்கள் கடவுளும் வெள்ளை யானைக்கு முன்பு வரந்தந்தருளியவனும், திருக்கருவையில் எழுந்தருளியவனுமான ஈசனது அழகிய பொன் போலும் அரிய திருவடி, மோக்ஷ நிலத்துக்கு ஒரு விதை; கருதும் அடியவர் களது சிந்தையாகிய தாமரை மலர்தற்கு ஒரு சூரியன்; கூறும்   அட்டமாசித்திக்கும் காரணம்; தவசிகளுக்கும் சிவயோகிகளுக்கும் (முறையே) தெளிந்த கருப்பஞ்சாறும், (இடையறாது)ஊறி வரும் அமிர்தமும்; அடியவர்செய்யும் பத்திக்குக் கருணா மழை பொழியும் மேகம்.

    முளரி-தாமரை. அருக்கன்-சூரியன். கன்னல்-கரும்பு; ஈண்டுத் தெளி என்னும் அடையால் கரும்பின் இரசத்தைக் குறித்தது.  கொண்டல்-மேகம். அத்தி-யானை.