பக்கம் எண் :

90

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

(தன் அடியார்க்குக்) கொடுத்தருளுகின்றவனும், (பசுக்களாகிய) நம்மை ஆட்கொள் ளும் உரிமையுடைய (பசு) பதியுமானவன் திருக்கருவை என்னும் நல்ல நகரில், திரட்சியுடையவும் (உயிர்கள் ஞானப்பால் பெறவேண்டி) விரும்புதற் கிடமானவு மான தனங்களை யுடைய பூங்கொடி போன்ற உமாதேவியோடும் இன்பமயமாகத் (திருவுருக்கொண்டு) எழுந்தருளி யிருக்கவும், மக்கள் (உலக இச்சைகளில் உள்ளம்) பொருமி கொடிய துன்பங்களை நுகர்வது என்ன அறிவோ ?  (அறிவின்மையே என்பது கருத்து).

    கொம்மை-திரட்சி. வெம்-விருப்பத்திற் கிடமாகிய; வெம்மை-விரும்புதலாகிய பண்பை உணர்த்தும் ஓர் உரிச்சொல்; ‘வெம்மை வேண்டல்’ என்பது தொல்காப்பியம்; வெம்மை வெப்பத்தை யுணர்த்துதல் வழக்கு. விம்முதல் - (ஏக்கத்தாற்) பொருமுதல்.  விரகு-அறிவு.

    உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் ஈறு தொக்கு உடை என நின்றது.  உழத்தல், வருந்தலுமாமாகையால் ‘கொடிய துன்பங்களில் வருந்துதல்’ எனினுமாம்.  ‘எவன்’ என்னும் வினாவினைக்குறிப்புமுற்று என்னென மரீஇ அறிவு என்னும் பண்புப் பெயரைக்கொண்டு முடிந்தது.

    ‘ஆளுடை நாயகன்’ என்றதால் உயிர்கள் அடிமையும் இறைவன் ஆண்டானு மாதல் பெறப்படும்.  அடிமையைக் காத்தல் ஆண்டான் கடமையாதலால், ஆண்டான் இருக்க அடிமை துயருழக்க ஏதுவின்று.  மேலும் அவ் வாண்டான் அருளோடு கூடியிருப்பவன்; அன்றியும்,  எவரும் அஞ்சிப் பின்வாங்காது   துணிந்து நெருங்கிக் குறையிரக்க ஏற்ற இனிய தோற்றத்துடன் அமர்ந்திருப்பவன்.  அவ் வாறாக அவனை அணுகித் தம் துயரை அவனருளால் போக்கிக் கொள்ளாத மானுடர் பெரும் பேதையரே ஆவார் என்பார் ‘ நாயகன் கொடியொடு மினிது வீற்றிருக்கத் துயருழப்பதென் விரகே’ என்றார்.

(82)