பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

23

றுள் ஈண்டுச் சுட்டப்பட்ட காரணம் நிமித்த காரணம் என்பதறிக. பிரணவ சொரூபனாதலால் ‘மறைமுடி யிருப்பான்’ என்றார்.       

(16)

17.  காரணம் ஏதென் றறிகிலேன், தமியேன
        கற்றல மனத்தினைக் கரைத்து
    வாரணி முலையாள் ஒப்பனை யோடு
        மழவிடை மேலெழுந் தருளி
    நாரணன் அறியாத் திருவுருக் காட்டி
        நல்லருள் சுரந்துவாழ் வித்தான்
    பூரணன் கருவைக் களாநிழல் அமர்ந்த
        புண்ணியன் விண்ணவர்க் கிறையே.

    எங்கும் நிறைந்தவனும் திருக்கருவையில் களாமரத்தின் நிழலில் எழுந்தருளிய புண்ணியனும் அயன் முதலிய தேவர்களுக்கு இறைவனுமாகிய பெருமான், தனியேனது கற்பாறை (போல வன்மையுடைய) மனத்தை (மெழுகு போல்) இளகச்செய்து, கச்சணிந்த தனத்தை யுடைய உமையம்மையோடு இளமைதங்கிய இடபவாகனத்தின்மே லெழுந்தருளி, திருமாலாலறியப்படாத திருவுருவத்தைக் காட்டி, நல்ல திருவருள் செய்து வாழ்வித்தனன்; (அதற்குக்) காரணமாகக்கூடியதாய் (என்னிடத்திலுள்ள சிறந்த குணம்) யாதென்று அறியகில்லேன்.

    அவனது திருவருட்பெருக்கே காரணம் என்பது கருத்து.

    அறிகிலேன்-அறியும் ஆற்றல் இலேன்; கில் ஆற்றலுணர்த்தும் ஓர் இடைச்சொல்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது. கு-சாரியை,
இல்-எதிர்மறை இடைநிலை என்பது முண்டு. கல்தலம்-கல்லிடம்-கற்பாறை. வார்-கச்சு. மழ-இள. விடை-ரிஷபம். பூரணம்-நிறைவு. விண்ணவர்-தேவர்.

    நாரணனும் நான்முகனும் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு சிவபெருமானது அடிமுடி காணப்புக்கும் காணாராயினர்