ஆசிரியர் வரலாறு | "அழகர் கிள்ளைவிடு தூது" என்னும் இந்நூலினாசிரியர் பெயர் பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்பது. பிள்ளை என்பதை விடுத்துப் புலவர் எனவும், கவிராயர் எனவும் அடுத்து வைத்து வழங்கியிருப்பதாகவும் அறிகிறோம். இவர் பாண்டிநாட்டிற் சிறப்பு வாய்ந்த தென்மதுரையில் வாழ்ந்தவர் எனவும், இவருடைய தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை எனவும் தெரிகிறது. பலபட்டடைக் கணக்கு என்பது ஒருவகை உத்தியோகம். அத் தொழிலைக் கைக்கொண்டு வாழ்ந்தவர்கள் இவருடைய முன்னோர்கள். ஆதலால் இப் பெயர் முன் அடைமொழியாக நிற்கிறது. சொக்கநாதர் என்பது தான் இயற்பெயர் எனக் காண்க. இவருடைய தாய் தந்தையர் மதுரைச் சொக்கநாதரை வழிபட்டு இவரைப் பயந்த காரணத்தால் சொக்கநாதர் எனப் பெயரிட்டனர் போலும். அங்கயற் கண்ணம் மையையும் சொக்கநாதரையும் இவர் பல பாடல் பாடித் துதித்து வழிபட்டனரென்பது வரலாறு கண்ட உண்மை. அதற்குச் சான்றாகத் தனிப்பாடற்றிரட்டில் பல கவிகளுள்ளன. இவர் பாடல்கள் யாவும் எளிமையும் இனிமையும் வாய்ந்தவை. உட்பொருளும் வெளிப்பொருளும் அமைத்தே பாடுவது இவர் இயற்கை போலும். வசைபோலத் தோன்றி இசை விளைவிக்கும் செய்யுட்களும் இவர் இயற்றியிருக்கின்றார். செங்குன்றையூரன் என்ற ஒரு வள்ளலை ஒரு காலத்தில் சென்று கண்டார். அவ்வள்ளல் பல புலவர் கட்குப் பரிசில் வழங்கித் தமிழ்க் கவிகள் கேட்டு இன்பமுற்று வாழ்ந்தனன். ஒவ்வொரு நாளும் பல புலவர் வந்து காண்பதும் பரிசில் பெற்றுச் செல்வதும் வழக்கமாக இருந்தது. செங்குன்றையூரன் வேற்றூர்க்குச் சென்றாலும் அங்கும் புலவர்குழுச் செல்லும். இதனைக் கண்டு வியந்த கவிஞர் உவமையமைத்து ஒரு கவி பாடினர். | | |
|
|