உ (சொற் பொருள்) தெள்ளு தமிழ் அழகர் சீபதி வாழ்வார் மீது - தெளிவாகிய தமிழ்மொழியை விரும்பும் அழகர் ஆகிய சீபதியில் வீற்றிருக்கும் திருமால்மீது, கிள்ளை விடு தூது கிளத்த - "கிள்ளைவிடு தூது" என்ற நூல் பாடுவதற்கு, பிள்ளைக் குருகு ஊர தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் - இளமையான பறவைகள் ஊர்ந்து வருவது கண்டு அஞ்சிச் சங்கு தானாகவே பரந்த கமுகமரத்தில் ஏறி ஒளிகின்ற (வளம் பொருந்திய), குருகூர் அத்தான் நேசம் கூர் - ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியுள்ள தலைவனே ! அன்பு மிக வைத்து அருள் புரிவாய். ஏ : அசை. (கருத்து) அழகர்மேற் கிள்ளை விடு தூது நான் பாடுவதற்குக் குருகூரிற் பிறந்த மாறனே ! நீ அருள்புரிந்து உதவி செய்வாய். (விளக்கம்) இது வைணவ சமயத்திற்குரிய நூல் ஆதலாற் குருகூரிற் பிறந்த நம்மாழ்வார் வணக்கம் முதலிற் கூறப்பட்டது. சைவசமய நூல்களுக்குப் பிள்ளையார் காப்புச் சொல்வதுபோல இதற்கு இவ்வாழ்வார்வணக்கம் கூறுவது மரபு, "முருகூர் மலர்க்குழலாய் மூதுரையாற் சொல்வன், குருகூரனைத் தொழுது கொண்டு" என்று பிறருங் கூறுதல் காண்க. சீபதி என்பது திருமாலிருஞ் சோலைமலைக்கு வடமொழிப் பெயர். அழகர் என்பதற்கு வடமொழியில் 'அலங்காரர்' என்று கூறுவர். நூலாசிரியர் தாம் எடுத்துக்கொண்ட நூல் இனிது முடிதற் |